தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படுவதன் அவசியம் குறித்தும், அதனை எப்படி அமைக்கலாம் என்பது குறித்தும் இம் மாத "
திசைகள்" இதழில் திரு.மாலன் எழுதியிருக்கிறார் (கட்டுரைக்கான சுட்டிகள் -
1,
2). அவர் கூறுவது போல கூட்டணி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லாதது என்பது எனது கருத்து. இது ஒரு Theoretical approach தான் என்றாலும் மக்களின் வாக்களிப்பு முறையில் இயல்பாக வரும் மாற்றங்கள் மூலம் தான் கூட்டணி ஆட்சி சாத்தியமாகும்.
அவ்வாறான கூட்டணி ஆட்சி முறை தமிழகத்தில் சாத்தியமாகுமா ? இந்த தேர்தல் என்றில்லாமல் எதிர்காலத்திலாவது இந்த வாய்ப்பு ஏற்படுமா ?
எந்த தியரிப்படியும் மக்கள் வாக்களிப்பதில்லை. மக்கள் ஒரே கட்சிக்கு தான் பரவலாக வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்ற கருத்து கூட இது வரையில் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதுவே தொடர்ந்து கொண்டும் இருக்காது. மாற்றங்கள் ஏற்படவே செய்யும்.
மக்களின் வாக்களிக்கும் முறையில் இயல்பாகவே மாற்றங்கள் வரமுடியும். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்த முறையை நோக்கும் பொழுது, தமிழகமும் அம் மாதிரியான ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நமக்கு தெரியவரும்.
இந்தியாவில் ஒரே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்கள் இன்று மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறார்கள். இதனை NDTVயின் பிரணாய் ராய் இந்திய ஜனநாயகம் Dynamicஆக மாறிக் கொண்டிருக்கிறது என்று வர்ணித்திருப்பார். கடந்த காலங்களில் தலைவர்களின் செல்வாக்கு, கட்சிகள் மீதான அபிமானம் போன்ற ஒரே பாணியில் வாக்களித்து கொண்டிருந்த மக்கள் (Static Pattern) சமீபகாலங்களில் கட்சிகளின் செயல்பாடுகளைக் கொண்டே வாக்களிக்கிறார்கள் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன், இந்திய பொருளாதார வளர்ச்சி, குறியீடுகளின் உயர்வு போன்றவற்றுடன் ஊடகங்களின் புகழ்ச்சியுடன் கடந்த தேர்தலை சந்தித்த பாஜக தோல்வியடைந்தது கூட இந்திய வாக்காளர்கள் "மிகவும்" Dynamicஆக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தும். தங்களுடைய அடிப்படை வாழ்க்கை தேவைகளைக் கொண்டே அவர்களின் வாக்களிக்கும் முறை இருந்து வந்திருக்கிறது.
தமிழகத்திலும் இது நடந்து இருக்கிறது. 1996, 2001 ஆகிய தேர்தல்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களும், 2004 பாராளுமன்ற தேர்தலின் முடிவும் சமீபகால உதாரணங்கள். ஜெயலலிதா தன்னுடைய சொந்த தொகுதியில் கூட தோல்வியடைந்தார் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். மக்கள் அரசாங்கங்களின் செயல்பாடுகளை மட்டுமே கொண்டு வாக்களிக்கிறார்கள். இந்த வாக்குகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. எந்தக் கட்சி எவ்வளவு வாக்கு வங்கி வைத்திருந்தாலும் அது ஒரு Static நிலை தான். அது மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது இல்லை.
தமிழகத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பல கருத்துக்களை பல காலமாக கூறி வந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் பாரளுமன்ற தேர்தலுக்கு ஒரு பாணியிலும், சட்டமன்ற தேர்தல்களில் ஒரு பாணியிலும் வாக்களிப்பார்கள் என்பதாக இரு கருத்து இருக்கிறது. சாதாரண கிராமத்து வாக்காளன், நான் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறேன் அதனால் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்றோ நான் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகிறேன் அதனால் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்றோ தீர்மானிப்பதில்லை. படித்தவர்கள் வேண்டுமானால் இவ்வாறு வாக்களித்து கொண்டு இருக்கலாம். மக்கள் அந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் கோபம் அல்லது ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் அபிமானம் இவற்றைச் சார்ந்தே வாக்களிக்கிறார்கள். அதனால் தான் 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வியடைந்தது.
இன்று இந்தியாவின் மைய அரசாங்கத்தை நிர்வாகிக்கும் ஆளும் கட்சியின் எதிர்காலம் மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கொண்டே உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மாநிலத்திற்கு மாநிலம் இயல்பாக மாறும் வாக்களிக்கும் முறையே இந்தியாவில் கூட்டணி ஆட்சியை தோற்றுவித்து இருக்கிறது.
இதைத் தவிர மற்றொரு முக்கியமான காரணம் - பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி.
இந்தியாவின் தேசிய கட்சிகள் இந்தியாவின் பலதரப்பட்ட மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இந்தக் காரணமே பல பிராந்தியங்களில் பிராந்திய உணர்வு தலைத்தூக்க முக்கிய காரணம். குறிப்பாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட பல மாநிலங்களில் அந்த மாநிலத்தின் உரிமை கேட்டு பிராந்திய உணர்வு தலைதூக்க தொடங்கியது. தமிழகத்தில் மொழியைச் சார்ந்து இந்த இயக்கம் இருந்தது என்றால் அசாம் போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகள் தங்கள் மாநிலத்திற்கு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரவில்லை என்பதாகவும், ஆந்திராவில் ஆந்திராவின் சுயமரியாதை போன்ற கோஷங்கள் மூலமாகவும் பிராந்திய கட்சிகள் உருவாகின. பல மாநிலங்களில் வலுவாக இருந்த பிராந்திய தலைவர்கள் தாங்கள் சார்ந்து இருந்த கட்சியையோ, காங்கிரசுக்கு மாற்றாக இருந்த கட்சியையோ பலமாக வளர்த்துக் கொள்ள முடிந்தது. இவ்வாறு தான் பல தலைவர்கள் உருவாகினர். கர்நாடகாவில் தேவகவுடா, ராமகிருஷண் ஹெக்டே, ஒரிசாவில் பிஜு பட்நாயக் பிறகு அவரது மகன், முலயாம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பிரணாண்டஸ், பால்தாக்ரோ போன்றோர் தங்களுடைய மாநிலத்தில் கணிசமான ஆதரவை பெற்றிருந்தனர். இதற்கு காரணம் மைய அரசால் பல மாநிலங்களின் தேவையை தீர்க்க முடியவில்லை. பொருளாதார பிரச்சனைகள் காங்கிரசை வலு இழக்க செய்தது. இது பிராந்திய கட்சிகளையும், தலைவர்களையும் வலு இழக்க செய்தது.
இதை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் இயக்கம் நேருவுக்குப் பிறகு தன்னுடைய தாக்கத்தை இழக்க தொடங்கியது. இது இந்திரா காந்தி காலத்தில் வளர்ந்து ராஜீவ் காலத்தில் பிரதிபலிக்க தொடங்கியது. இந்தியா போன்ற ஒரு பெரிய தேசத்தில் அதுவும் பல வேறுபாடுகளைக் கொண்ட தேசத்தில் ஒரே கட்சி தன்னுடைய தாக்கத்தை தொடருவது சாத்தியமில்லாதது. நேரு என்ற கவர்ச்சியான பிம்பம், சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்சி என்பதை கடந்து அதுவும் ஒரு சராசரி அரசியல் கட்சி என்றான பொழுது அதிலிருந்து பல கிளைக் கட்சிகள் தோன்ற தொடங்கின. மாற்று எண்ணங்களும் வலுப்பெற தொடங்கின. அந்த மாற்று எண்ணங்களின் ஒரு அங்கமாகத் தான் பாரதீய ஜனதா கட்சி தோன்றியது. பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி, பிற பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி போன்றவை காங்கிரசின் ஓட்டுவங்கியை கரைக்க தொடங்கின.
இவ்வாறான பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி தேவ கவுடா பிரதமராகியப் பிறகு வலுப்பெற தொடங்கியது. மாநிலம் மாநில கட்சிகளுக்கு, மைய அரசு தேசிய கட்சிகளுக்கு என்ற ரீதியில் கூட்டணி அமைத்து கொண்டிருந்த மாநில கட்சிகள் மைய அரசில் பங்கேற்பும் வாய்ப்பை பெற்றவுடன் மைய அரசில் பங்கு கொள்வதிலும், மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இருக்கும் வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தன.இது தேசிய கட்சிகளை மேலும் பலவீனப்படுத்தின.
ஒரு கட்சி ஆட்சி முறை களையப்பட்டு பல கட்சி கூட்டணி முறைக்கு இந்தியா இவ்வாறு தான் வந்து சேர்ந்தது. இன்று இந்த நிலையில் இருந்து இந்தியாவால் விலக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இதே மாதிரியான போக்கு தற்பொழுது தமிழக அரசியலில் காணப்படுகிறது. காங்கிரசின் ஓட்டு வங்கியை 1967க்குப் பிறகு கைப்பற்றிய திமுக, பின் தன்னுடைய வாக்கு வங்கியை அதிமுகவிடம் இழந்தது. வடமாவட்டங்களில் திமுகவின் பலமான வன்னியர் வாக்கு வங்கியை பாட்டாளி மக்கள் கட்சி பகிர்ந்து கொண்டது. தலித் மக்களை கொண்ட காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் கைப்பற்றியது. இது போல மதிமுகவிடம் தன்னுடைய தென் மாவட்ட வாக்கு வங்கியில் கணிசமான பங்கினை திமுக இழந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அதிமுகவின் பலமான தேவர் வாக்கு வங்கி சரியலாம்.
இதற்கும் பொருளாதார காரணங்களை தான் கூற வேண்டும். உதாரணமாக பாமக எப்படி தோன்றியது என்பதை பார்க்கு பொழுது இது நமக்கு தெரியவரும். வடமாவட்ட பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்கள் ஏழ்மையில் இருந்த நிலையில் அவர்களின் கல்வி வேலைவாய்ப்பிற்கான இடஒதுக்கீடு போராட்டமாக தொடங்கி பின் பொருளாதார ரீதியில் ஒரளவிற்கு முன்னேறிய நிலையில் அரசியல் அதிகாரங்களை பிடிக்க பாமக உருவாகியது. வன்னிய மக்களின் போராட்டம் நடைபெறும் வரை திராவிட கட்சிகள் இந்த மக்களை குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அந்த நிலையை தனக்கு சாதகமாக வன்னியர் சங்கம் மற்றும் பாமக பாமக பயன்படுத்திக் கொண்டது.
அது போல தலித் மக்களை இரு கட்சிகளும் உதாசினப்படுத்திய நிலையில் அவர்களுக்கான இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் உருவாகியது. தலித் மக்களுக்ம் இந்த இயக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
இந்தியாவில் எப்படி பிராந்திய உணர்வைச் சார்ந்து இந்த இயக்கங்கள் வளர்ந்தனவோ அது போல தமிழகத்தில் சாதியை அடிப்படையாக கொண்டு இந்த இயக்கங்கள் வளர்கின்றன. இந்தியாவில் எப்படி பிராந்திய உணர்வுகள் இயல்பாக இருக்கின்றனவோ அது போல தமிழகத்தில் சாதீய உணர்வு இயல்பாக இருப்பதால் அதனைச் சார்ந்து தான் இயக்கங்கள் வளர முடியும். தமிழகம் போன்று இருக்கும் மற்றொரு மாநிலம் உத்திரபிரதேசம். அங்கு இன்று கூட்டணி ஆட்சியைத் தான் அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்,
வடமாவட்டங்களில் ஏற்பட்ட இந்த மாற்றம் தென்மாவட்டங்களில் ஏற்படவில்லை என்றாலும் அதிமுகவைச் சார்ந்து இருக்கின்ற தேவர் வாக்குகள் எதிர்காலத்தில் சரியலாம். அப்பொழுது தென்மாவட்டங்களில் பலமாக தெரியும் அதிமுக தன்னுடைய பலத்தை இழக்கும். ஏற்கனவே வடமாவட்டங்களில் அதிமுகவிற்கு பெரிய செல்வாக்கு இல்லை. இந்த நிலையில் தென்மாவட்ட வாக்கு வங்கி சிதறும் பொழுது கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உறுதியாகும் (இது என்னுடைய கருத்து தான். நடக்காமலும் போகலாம்). ஆனால் தற்போதைய சூழலில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் குறைவு தான்.
இன்று தமிழக அரசியலில் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை எந்தக் கட்சியும் தனித்து போட்டியிடும் நிலையில் இல்லை. இது பெரிய கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. பாமக 30இடங்களை திமுக கூட்டணியிலோ அதிமுக கூட்டணியிலோ பெற்றுக் கொண்டு அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்ந்த முன்வந்து விடுகிறது. தனித்து போட்டியிட்டு ஒரு இடம் கூட கிடைக்காமல் இன்று மதிமுகவும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதற்கு காரணம் சிறுகட்சிகள் தங்களை ஒரு அணியாக அமைத்துக் கொள்வதில் இருக்க கூடிய சிக்கல்கள். அதனால் பெரிய கட்சிகள் இவ்வளவு தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என்று சொல்லும் பொழுது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் சிறு கட்சிகளுக்கு ஏற்படுகிறது.
ஆனால் இந்த நிலையில் கூட எதிர்காலத்தில் மாற்றம் வரலாம். அது சிறிய கட்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. சமீபத்தில் கூட பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இவ்வாறு இணைய தொடங்கியதையும், இவ்வாறு இணைபவர்களுக்கு நிறைய இடங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக திமுக அதனை நிராகரித்ததையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறும் பட்சத்தில் இது எதிர்வரும் தேர்தல்களில் சாத்தியமாகலாம். அப்பொழுது பெரிய கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் எழலாம்.
இன்று திமுக கூட்டணி போட்டியிடும் இடங்களைப் பார்க்கும் பொழுது கூட்டணி ஆட்சியை நோக்கி நாம் நகர்ந்து செல்வது தெரியவரும். திமுக 130 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இதில் சுமார் 80% தொகுதிகளில் வெற்றி பெற்றே தீரவேண்டும். பெரிய அலை இல்லாமல் கடுமையாக போட்டியிருக்கும் இந்த தேர்தலில் இது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. அதுவும் தவிர தென்மாவட்டங்களில் பலவீனமாக இருக்கும் திமுக தென்மாவட்ட தொகுதிகளை கைப்பற்ற முடியுமா என்பதை பொறுத்தே திமுக தனித்து ஆட்சி அமைப்பதோ, கூட்டணி ஆட்சி அமைப்பதோ இருக்கிறது. திமுகவின் வெற்றியே தென்மாவட்டங்களில் அந்தக் கட்சி பெறும் வெற்றியை கொண்டே இருக்கிறது என நான் நினைக்கிறேன்.
அது போல அதிமுக வடமாவட்டங்களில் பலவீனமான கட்சி. விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக தவிர இந்தக் கூட்டணிக்கு வடமாவட்டங்களில் திமுக-பாமக கூட்டணியுடன் ஓப்பிடத்தகுந்த அளவில் செல்வாக்கு இல்லை. எனவே வடமாவட்டங்கள் தான் அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகின்றன.
வடமாவட்டமும், தென்மாவட்டமும் இரு கூட்டணி இடையே பிரிந்து போனால் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உருவாகும். அப்படி இல்லாவிட்டால் ஒரு கட்சி ஆட்சி தான் ஏற்படும்.
தமிழக மக்கள் எப்பொழுதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் தேர்தலில் இந்தியாவெங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் பெருவாரியாக வெற்றி பெற்று கொண்டிருக்க, சென்னை மாகாணத்தில் (தமிழகம், ஆந்திராவின் சிலப் பகுதிகளை உள்ளடக்கிய மாகாணம்) காங்கிரஸ் குறைவான இடங்களையே வெல்ல முடிந்தது.
அன்றைக்கு தொடங்கி பல தேர்தல்களில் பொதுவாக ஊடகங்கள் முன்வைத்த வாதங்களை தமிழக மக்கள் மறுத்தே வந்திருக்கிறார்கள். அது வெற்றி பெறும் கட்சிகள் குறித்து கணிப்புகளாக இருந்தாலும் சரி, சினிமா நடிகர்களை முன்வைக்கும் ஊடகங்களின் பிரச்சாரங்களாக இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் மக்கள் பொருட்படுத்துவதில்லை. மக்களின் உணர்வுகளை ஊடகங்கள் சரியாக பிரதிபலித்ததும் இல்லை.
இந்த தேர்தலிலும் ஆச்சரியங்கள் இருக்கலாம்.
நன்றி -சசி