நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
Sunday, November 21, 2010
பட்டையை கிளப்பும் பாமக அரசியல்...
திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுக எலி வலையில் புகுந்து கொள்ளும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக எலி வலையினுள் புகுந்து கொள்ளும், அம்மாவுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ அய்யாவை தூக்கி உள்ளே வைத்தாலோ மட்டுமே ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் என்று தூள் பறக்கும், மற்ற நேரங்களில் திமுக ஆட்சியில் அதிமுக என்று ஒன்று இருப்பதோ அதிமுக ஆட்சியில் திமுக என்று ஒன்று இருப்பதோ பெரும்பாலும் தெரியவே வருவதில்லை.
தற்போது நடந்துவரும் திமுக ஆட்சிகாலத்தில் வழக்கம் போல அதிமுக எலி வலையினுள் புகுந்து கொள்ள தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தது பாமகவும் விஜயகாந்த்தும் மட்டுமே....
ஏகோபித்த கர கோச ஊடக வெளிச்சத்தில் உலா வந்த மாற்றத்தை தருவேன் என்று வந்த விஜயகாந்த்தோ அற்புதமான ஒரு மாற்றத்தை உருவாக்கினார், தமிழகத்தில் இப்போதும் தனிப்பட்ட முறையில் வலுவான கட்சிகள் பட்டியலில் ஒரு சிறிய வித்தியாசத்தில் அதிமுக திமுகவை விட முன்னால் உள்ளது, ஆனால் அந்த கட்சியின் தலைவியோ அல்லது வலுவான திமுக வின் தலைவர்களின் வீட்டிலோ வருமானவரி முதல் இன்ன பிற எத்தனையோ சோதனைகள் நடந்த போதும் எந்த தொண்டனும் கூடிவந்தோ கூட்டி வந்தோ அதிகாரிகளை கேரோ செய்வதோ வழிமறித்ததோ நடந்ததில்லை, ஆனால் விஜயகாந்த் வீட்டில் வருமாணவரி சோதனைக்கு வந்த அதிகாரிகள் மறிக்கப்பட்டதும் கேரோ செய்ததும் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியது அல்லது கூட்டப்பட்டதும் நடந்தது, அதன் பின் அதை அப்படியே அட்டர் காப்பி அடித்து செல்வி.ஜெயலலிதா வீட்டில் வருமானவரி சோதனை என்றவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர் படைகளுடன் செங்கோட்டையன்களும் ஜெயக்குமார்களும் வீட்டையும் கட்சி அலுவலகத்தையும் பாதுகாத்தனர், ஆகா நல்ல மாற்றத்தை உருவாக்கிவிட்டார் விஜயகாந்த், இனி தமிழகத்தின் எந்த அரசியல் தலைவன் வீட்டிலும் வருமான வரிசோதனையோ எந்த சோதனையுமோ போடமுடியாத மாற்றத்தை உருவாக்கினார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் சத்தங்களும் குரல்களும் பெரும்பாலும் அவரது திருமண மண்டபத்தை சுற்றியே வந்தது, காரைக்குடி குரூப்ல கூப்டாங்க, தஞ்சாவூர் குரூப்ல கூப்டாங்க, என்ற அளவிற்கு என்னை கூட்டணிக்கு கூப்பிட்டாங்க மிரட்டினாங்க என்ற அளவிலேயே நின்று போனது அவரது சத்தங்கள்....
சென்ற ஆட்சியிலும் சரி இந்த ஆட்சியிலும் சரி மக்கள் போராட்டங்கள் ஓரளவிற்கு கம்யூனிஸ்ட் மற்றும் பாமக கட்சியினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன(தேவைக்கதிகமாக எதிர்வினை புரியப்பட்ட குஷ்பு பிரச்சினை தவிர்த்த மற்றவைகள் மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்தே இருந்தன) , சென்ற ஆட்சியின் தான் தோன்றித்தனமான தலைமை இருந்ததும், மேலும் ஆட்சிக்கு எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்க முடியாத சட்டமன்ற பெரும்பாண்மை அதிமுக விற்கு இருந்ததுமான சூழலையும் ஒப்பு நோக்க வேண்டும்.
இந்த ஆட்சி ஆரம்பத்திலிருந்தே அதிமுக அம்மாவிற்கு பிரச்சினை என்றால் மட்டுமே வெளிவருவோம் என்று பதுங்கிகொண்ட நிலையில், காங்கிரஸ் கமுக்கமாக இருக்க தோழமைகட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக செயல்பட ஆரம்பித்தது பாமக. துனை நகரம் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் என்பதில் ஆரம்பித்து பாலாற்றில் அணைகட்டுவது தொடர்பாக அரசை எச்சரித்தும் பயனின்றி ஆந்திர அரசு கட்டும் அணைப்பற்றி சட்டமன்றத்திலேயே அது துடுப்பணை தடுப்பணை என்று சால்ஜாப்பு சொன்னார் அமைச்சர் துரை முருகன், நேரடியாக அணைகட்டும் இடத்திற்கே சென்று பாமக ஆர்பாட்டங்கள் செய்ய ஆந்திர அரசின் காவல்துறை மட்டுமின்றி அந்த ஊர் மக்களிடமும் உதைபட்டு வந்தனர் பாமகவினர், அதன் பின்பே இது தொடர்பாக கொஞ்சம் போல தீவிர நடவடிக்க எடுக்க ஆரம்பித்தது திமுக அரசு.
தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் சற்றேனும் மூச்சு விடும்படி நடந்திருக்கின்ற விடயம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி அதிகமகா கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சட்ரிக்கைகள், இப்பிரச்சினையை முதலில் பாமக இராமதாசு அவர்கள் கிளப்பியபோது சும்மா அதிகமாக வசூலிக்கின்றார்கள் என்று சொன்னால் போதாது ஆதாரம் வேண்டும், யாருமே புகார் கொடுக்கவில்லையே எனவே ஒன்றும் செய்ய முடியாது என்று எல்லாம் கிட்டத்தட்ட தனியார்கல்லூரிகளின் சங்க செயலாளர் போன்று பேசிய முதல்வர் அவர்கள் அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான காழ்ப்புணர்சியே இப்படியான போராட்டத்தை பாமக நடத்துகிறது என்று காரணமெல்லாம் சொன்ன முதல்வர் தற்போது முதல்வருக்கு அமைச்சர் பொன்முடியின் மீது என்ன காழ்ப்புணர்வோ அல்லது அமைச்சர் பொன்முடியை நாடுகடத்த முடியவில்லையே என்று முதல்வருக்கு ஏதேனும் ஏக்கமோ தெரியவில்லை, அரசாங்கமே நான்கு குழுக்கள் அமைத்து பல கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பல கல்லூரிகளில் சோதனை நடத்தும் குழுக்களெல்லாம் இப்போது இந்த அரசாங்கம் அமைத்துள்ளது, இதுவும் கூட பாமக ஸ்டைலில் நேரடியாக களத்தில் இறங்குவோம் கைப்பேசி எண் கொடுத்து கல்லூரியில் அதிக கட்டணம் வசூலித்தால் கைப்பேசி எண்ணுக்கு தெரிவியுங்கள் பாமக அந்த கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடுவோம் என்று கிட்டத்தட்ட மிரட்டிய பின்பே குழுக்கள் அமைப்பது, புகார்களை பெறுவது, சோதனை என்றெல்லாம் அரசாங்கம் இறங்கியுள்ளது.
பாமகவும் மருத்துவர் இராமதாசும் நடத்தும் போராட்டங்களை சில கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டுமென்று போராட்டங்களை தூண்டுகிறார்கள் என்று பேசும் முதல்வர் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு பிரச்சினையென்றால் அந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து தங்களை வளர்த்துக்கொள்வதில் என்ன தவறு? இந்தி திணிப்பு எதிர்ப்பும் மொழிப்போராட்டமும் முடிந்த பின் என்ன திமுகவை கலைத்துவிட்டார்களா என்ன? அல்லது திமுக இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக போராடியதால் கிடைத்த ஆதரவு எதுவும் திமுகவிற்கு வேண்டாமென்று சொல்லிவிட்டார்களா? இல்லையே பின் ஏன் பாமக மீது மட்டும் இந்த விமர்சனம்? வெளியூர் அண்ணாச்சிகளுக்காக இரிலையன்சை எதிர்ப்பதும், உள்ளூர் அண்ணாச்சிகளுக்காக டாட்டாவை எதிர்ப்பது என்று இந்த போராட்டங்களுக்கு காரணம் கூறலாம், அண்ணாச்சிகளின் தயவைத் தெற்கே வளர்த்துக் கொள்ள இந்த தந்திரம் என்று சொன்னாலும் இந்த எதிர்ப்பில் இறங்குவதில் என்ன தவறு?பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்துவதும் அதன் வழியாக கட்சி வளர்ப்பதிலும் என்ன தவறு? அல்லது இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி கட்சி வளர்த்த வரலாறு தமிழகத்திலே இல்லையா என்ன?அட கட்டிங்கிற்கு தான் பா இப்படியெல்லாம் போராடுகிறார்கள், அட ர்செண்ட்டேஜ்க்காகத்தான் பா போராடுகிறார்கள் என பச்சையாக பாமகவின் போராட்டங்கள் மீது எச்சில் துப்புபவர்கள் கமுக்கமாக இருக்கும் காங்கிரசும், கம்முன்னு இருக்கும் காம்ரேட்டுகளும், அமுக்கி வாசிக்கும் அதிமுகவும் அமைதியாக இருப்பதற்கு கட்டிங்கும் பர்செண்ட்டேஜூம் சரியாக கிடைத்துவிட்டது தான் காரணம் என்பார்களோ? இப்படியாக கொச்சை படுத்துவதென்றால் எந்த கட்சியின், எந்த தனிமனிதரின், எந்த சமூகத்தின், எந்த அமைப்பின் எந்த போராட்டங்களையும் கொச்சைப்படுத்தலாம்.
டாடா மினரல் ஆலை வந்தால் தென்மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒரு முறை கடலூர் சிப்காட் வளாகத்தை பார்த்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன், 20 ஆண்டுகளுக்கு முன் சிப்காட்டிற்காக கிட்டத்தட்ட 17 கிலோமீட்டர் நீளம் வரை விளை நிலங்களையும் மானவாரி நிலங்களையும் அரசாங்கம் கையகப்படுத்திய போது கொடுக்கப்பட்ட உறுதி மொழிகளும் இன்னும் 10 ஆண்டுகளில் கடலூரில் வேலை இல்லாத பேச்சே இருக்காது என்று நீட்டி முழங்கியவர்களின் குரல்கள் இன்னும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது, சிறு குறு விவசாயிகள் நிலத்தை கொடுத்துவிட்டே கிடைத்த காசை இரண்டே ஆண்டுகளில் அழித்துவிட்டு அதே சிப்காட்டில் கூலித்தொழிலாளிகளாக சென்று அந்த இரசாயன ஆலைகளில் கடைநிலை வேலைகள் செய்துவிட்டு (மேல்மட்ட வேலைகள் முழுக்க வெளியூர் ஆட்கள், கடைசி சில வருடங்களில் கீழ்நிலை வேலைகளுக்கும் கூட குஜராத்திலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து வேலை செய்தார்கள்) சிறு நிலக்கிழார்களாக இருந்தவர்கள் கூலிகளாக வேலை செய்து இராசயன ஆலைகளால் மண், நீர், காற்று என அத்தனையும் மாசுபட்டு 17 அடி ஆழத்தில் கிடைத்த நீர் இப்போது 100 அடிக்கு கீழே போனாலும் கிடைக்கவில்லை என்பதால் ஆலைகளை மூடிவிட்டு செல்ல இப்போது மண் நீர் காற்று உடல்நலம் என அத்தனையும் கெட்டுப்போய் கூலி வேலையும் இல்லாமல் நிற்கும் அவலநிலை கடலூர் சிப்காட்டால்....
மாறன் சகோதரர்கள் கள்ள சாராயம் காய்ச்சியோ சூதாட்ட கிளப் நடத்தியோ பணம் சம்பாதித்துக்கொண்டில்லை அதை அவர்கள் செய்துகொண்டிருந்தால் இன்னேரம் அரசாங்கம் மாறன் சகோதரர்களுக்கு போட்டியாக கள்ளசாராம் காய்ச்சிக்கொண்டோ சூதாட்ட கிளப் நடத்தவோ ஆரம்பித்திருக்கும், கலைஞர் டிவி நடத்தும் அளவிற்கு பணமும் பலமும் இருக்கும் கலைஞர் குடும்பத்தால் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்துமளவிற்கு பணமோ பலமோ இல்லையோ என்னவோ அரசாங்கம் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்த முனைகிறது, நல்லவேளையாக கேபிள் இணப்பு, தொலைக்காட்சி நடத்துதல் என்று மாறன் சகோதரர்கள் நிறுத்திகொண்டதால் அரசாங்கம் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்துவதோடு நிறுத்திக்கொள்கிறது.
சாராயாத்தை அட சீமசரக்குதாங்க அந்த குடியை அரசாங்கமே ஊற்றிக்கொடுக்க ஆளெடுத்து நடத்துகிறது, கேளிக்கை கேபிள் இணைப்புகளை அரசாங்கம் நடத்துகிறது ஆனால் ஒரு மினரல் ஆலையை தென்மாவட்ட மக்களுக்கு ஏகத்திற்கும் வேலைவாய்ப்பையும் நன்மையையும் விளைவிக்க போவதாக சொல்லப்படும் ஒரு ஆலையை அரசாங்கம் நடத்த முடியவில்லையோ டாடா வந்து நடத்தப்போகிறதாம்? சில ஆயிரம் கோடி கொட்டி இலவச தொலைக்காட்சி வழங்கும் அரசால் ஓராயிரம் கோடி போட்டு இந்த ஆலையை நடத்த முடியலையோ?இதை எதிர்த்தால் கட்சி வளர்க்க பிரச்சினைகளை பயன்படுத்துகிறார்கள் என பாமக மீது பாய்கின்றனர் அப்போ என்ன அரசாங்கம் சாராயம் ஊற்றி கொடுப்பதையும் மாறன் சகோதரர்களின் தொழிலை மட்டுப்படுத்தும் தொழில்களையும் மட்டும் தான் அரசாங்கம் செய்யுமா? பாமக பிரச்சினைகளில் தலையிட்டு கட்சியை வளர்த்துக்கொள்ளுமளவிற்கு அரசாங்கம் ஏனப்பா பிரச்சினைகளை உருவாக்குகிறது அல்லது பிரச்சினைகளை பாமக வந்து தலையிட்டு அவர்கள் கட்சியை வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பிரச்சினைகளில் ஏன் அலட்சியமாக இருக்கின்றது?அரசாங்கமே நடத்தும், எ.எல்.சி. கார்ப்பரேஷனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலருக்கு பணம் கிடைக்காமல், நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பதும் பலருக்கு கிட்டாமல் போக 90 களில் டி.ஜி.எம்(டெப்புடி ஜெனரல் மேனேஜர் - என்.எல்.சிஅதிகாரவர்க்கத்தின் பவர் செண்ட்டர்கள்)கள் கேரோ செய்யப்பட்டு அலுவலகங்களில் முற்றுகையிடப்பட்டு மற்றும் பல பாமக ஸ்டைல் போராட்டங்களினால் பணமும் வேலையும் பலருக்கு கிடைத்தது, ஆனால் அதற்கான காலம் 30 ஆண்டுகளுக்கும் மேல், இப்போது கூட ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பிரச்சினைகள் ஆகின்றன (பின்ன இதற்கு பணமும் வேலையும் கிடைக்க இன்னொரு 30 ஆண்டுகள் யார் காத்திருப்பது) அரசாங்கம் நடத்தும் நிறுவனத்திலேயே இந்த நிலை என்றால் தனியார் நடத்தும் நிறுவனத்தில் எந்த அளவிற்கு நிவாரணமும் மற்றவைகளும் கிடைக்கும்? டாடா ஆலை தொடர்பாக நிறைய கேள்விகள் இருக்கின்றன, அதை வேறொரு சமயத்தில் எழுதலாம்.
நான் தலையிட்டதால் துணை நகரம் நிறுத்தப்பட்டது, நான் தலையிட்டதால் இது ஆனது, அது ஆனது என்று மருத்துவர் இராமதாசு சொல்கிறாராம், ஒவ்வொரு பிரச்சினைகளின் போதும் அவர்கள் தலையிட்டதால் என்ன வெற்றி கிடைத்தது என்பதை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள், அரசாங்கமே அதன் சாதனைகளை அரசு விளம்பரங்கள் மூலம் செய்து கொண்டு தானே இருக்கின்றன, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றிக்கு இன்றுவரை உரிமை கொண்டாடுகிறது திமுக, சுதந்திரம் பெற்று தந்ததற்கு காங்கிரஸ் உரிமை கொண்டாடுகிறது, அந்தந்த ஊர்களில் ஆலை வந்ததற்கும் ரோடு போட்டதற்கும் காரைக்குடி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக பழ.கருப்பையா அவர்களுமாக பிரச்சினைகளில் அவரவர்களின் வெற்றியை சொல்லிக்கொள்வது என்ன புதுசா? இராமதாசு மட்டும் 16 வயதினிலே பரட்ட சொல்வது போல "இது எப்படியிருக்கு" என்று சொல்கிறார் என விமர்சனம்.
கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிக்கலாமா? இது சூழ்ச்சி அரசியல் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது, சூழ்ச்சி அரசியலா அல்லது இராச தந்திர அரசியலா என்று சொல்வது ஆளைப்பொறுத்து பலருக்கும் மாறும், சிலர் செய்தால் சூழ்ச்சியரசியல், அதையே வேறு சிலர் செய்தால் இராசதந்திர அரசியல் சரி அதை விடுங்க.
தமிழகத்திலே கூட்டணி நிலை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படுத்தும், நடப்பது கூட்டணி கட்சி அல்ல, கூட்டணி கட்சிகளின் ஆதரவால் நடக்கும் திமுகவின் தனியாட்சி, அரசாங்கத்தின் இரண்டு ரூபாய் அரிசி திட்டமாக இருந்தாலும் வேறு நல்ல திட்டங்களுக்கும் கிடைக்கும் ஆதரவு திமுகவிற்கு மட்டுமே, அதில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு இல்லை, அரசு அதிகாரத்திலும் பங்கு இல்லை, ஆனால் மக்கள் பாதிப்படையும் பிரச்சினைகளால் ஏற்படும் கெட்ட பெயர் திமுகவிற்கு மட்டுமல்ல கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே, மக்கள் மன்றத்தில் செல்லும்போது அன்னைக்கு திமுக தான் காரணம் நாங்கள் அல்ல என்றால் அன்னைக்கு நீங்களும் தானே திமுகவோடு வாயை மூடிக்கொண்டு இருந்தீர்கள் என்பார்கள். அதே எதிர்கட்சியாக இருந்தால் வாயை திறக்காமல் இருந்தால் கூட அரசாங்கத்தின் கெட்ட பெயர்களுக்கு பங்காளிகளாக மாட்டார்கள், எனவே எதிர்கட்சியாக இருப்பதை விட தனியாட்சி நடத்தும் கட்சிக்கு கூட்டணி கட்சியாக இருப்பது மிகவும் சங்கடமானது, எதிர்கட்சியாக இருக்கும் போது அரசை விமர்சிப்பதை விட ஆளும் கட்சிக்கு கூட்டணிகட்சியாக இருக்கும் போது அரசின் பிரச்சினைக்குறிய மக்கள் விரோத செயல்பாடுகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். அந்த நிலைதான் பாமகவிற்கு இப்போது.
பாமக என்றால் முன்பு சிலருக்கு எப்போதும் எரியும், அவர்களுக்கு பாமக மட்டுமல்ல, திமுக என்றாலும் எரியும் அவர்களை விட்டுத்தள்ளுங்க, இப்போது பாமக மற்றும் மருத்துவர் இராமதாசு விசயத்தில் முதல்வரின் பதட்டத்தையும், மற்ற சிலரின் பதட்டமும் பாமக எதை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதை நன்றாகவே காட்டுகின்றது.
Subscribe to:
Posts (Atom)