நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, July 20, 2011

வறட்டுப் பிடிவாதமன்றி வேறு என்ன ?-சவுக்கு

வறட்டுப் பிடிவாதமன்றி வேறு என்ன ?அச்சிடுகமின்-அஞ்சல்
 
சவுக்கு
  
சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சமச்சீர்க் கல்விக்கான பாடதிட்டங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு ஏற்படுத்திய பொம்மைக் கமிட்டி எவ்விதமான உருப்படியான ஆய்வையும் செய்யவில்லை என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாகவே கண்டுபிடித்திருக்கிறது.

அந்த பொம்மைக் கமிட்டிக்கான வரைவு அறிக்கையையும், இதர வேலைகள் அனைத்தையும் செய்தவர், பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் சபிதா ஐஏஎஸ் என்பதை தெளிகாவச் சுட்டிக்காட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

high_court
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் 2 முதல் 5 வகுப்புகளுக்கும், 7 முதல் 10 வகுப்புகளுக்கும், சமச்சீர்க் கல்வியை எப்படி இந்த ஆண்டே அமல்ப்படுத்துவது என்பதை அலசி ஆராயவே கமிட்டி அமைத்ததே தவிர, இருக்கும் புத்தகங்கள் மோசம் என்று சொல்வதற்கு கமிட்டி அமைக்கவில்லை அதனால், பாடப்புத்தகங்கள் மோசம், இந்த ஆண்டு அமல்ப்படுத்த இயலாது என்ற அறிக்கை வரம்பை மீறிய ஒரு அறிக்கை.

மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பாக நியமிக்கப் பட்ட இரண்டு உறுப்பினர்களான டாக்டர் மல்லா பிரசாத் மற்றும் பேராசிரியர் திரிபாதி ஆகிய இருவரும், இந்தப் பாடப்புத்தகங்களை ஆராய்ந்து, பாடப்புத்தகங்களில் சில குறைகள் இருந்தாலும், பெரும்பாலும், மிகச் சிறப்பாகவே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர். மற்றொரு உறுப்பினராக விஜயலட்சுமி சீனிவாசன், மெட்ரிகுலேஷன் மற்றும் சமச்சீர் கல்வி ஆகிய இரண்டுமே, தேசிய கல்விக் கொள்கை வகுத்தது போல இல்லை, ஆனால், சமச்சீர் கல்வியின் பெரும்பாலான பாடத்திட்டங்கள் சிற்சில குறைகளைத் தவிர ஏற்புடையதாகவே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஏவி பள்ளிகளின் முதலாளி, ஜெய்தேவ், சமச்சீர் கல்வி சிறப்பான நோக்கமாக இருந்தாலும், தற்போது உள்ள தரத்தை குறைப்பது அதற்கு தீர்வாகாது. ஆனால் இப்போது இருக்கும் புத்தகங்களை பார்த்தால், தரம் குறைந்து சமச்சீர் கல்விக்கான நோக்கமே வீழ்த்தப் பட்டு விட்டது என்பது புரிகிறது என்கிறார்.

திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி என்ன கூறுகிறார் தெரியுமா ? தற்போது உள்ள அனைத்து சமச்சீர் பாடப்புத்தகங்களும் மோசம். அனைத்தையும் மொத்தமாக திருத்த வேண்டும்.   இது உடனடியாக முடியாது குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகளாகவது ஆகும்.   அதைச் செய்து விட்டு சமச்சீர் கல்வியை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.   வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் என்று சவுக்கு எழுதியிருந்தது இதைச் சுட்டிக் காட்டித் தானே ?

சமச்சீர் கல்வியை எப்படி அமல்படுத்துவது என்பது நோக்கமாக இருந்தால், அதில் உள்ள குறைகளைச் சரி செய்வதற்கு வழி சொல்லுவார்கள். சமச்சீர் கல்வி வரவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பவர்களை கமிட்டி உறுப்பினர்களாகப் போட்டு ஒரு பொம்மைக் கமிட்டியை நியமித்தால் இப்படித் தான் கருத்த சொல்வார்கள். ஆனால், உயர்நீதிமன்றம், இந்த பொம்மைக் கமிட்டியின் முடிவுக்கு பெரும் முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.

மாநில அரசும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், சமச்சீர் கல்வித் திட்டம், அவசர கோலத்தில் அமல்படுத்தப் பட்டுளளது என்ற வாதத்தை முன் வைத்தன. இந்த வாதம் சரியா என்பதை ஆராய்வதற்காக, முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாத என்று தொடுக்கப் பட்ட வழக்கின் கோப்பு தற்போது மீண்டும் ஆராயப் பட்டது. அதை ஆராய்ந்த போது 2006ம் ஆண்டு முதல் முழுமையான ஆராய்ச்சிக்களை மேற்கொண்ட பின்னரே, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவிலும், கடந்த ஆட்சி அறிமுகப் படுத்திய காரணத்தினாலேயே, இந்தப் பாடத்திட்டம் சரியில்லை, 200 கோடி ரூபாய் தவறான கொள்கைகளால் வீணடிக்கப் பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த நேரத்திலே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
“ஓட்டு வாங்குவதற்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நடந்து கொள்ளும் அரசியல் கட்சிகளைக் கண்டால் எங்களுக்கு கவலையாக இருக்கிறது.   அரசியல் அமைபுச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசாகவே அவர்களைப் பார்க்கிறது என்பதை காண மறுக்கிறார்கள்.   ஆட்சிக்கு வரும் ஒரு அரசியல் கட்சி ஏற்கனவே இருந்த ஒரு அரசு எடுத்த முடிவை, அந்த முடிவு மற்ற மாநிலங்களையோ, தேசத்தையோ எப்படி பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளாமல், எளிதாக ரத்து செய்யக் கூடாது. பெரும்பாலானவர்களை கலந்து ஆலோசித்து அரசு நிர்வாகத்தில், எடுக்கப் பட்ட ஒரு முடிவை, அந்த முடிவு அரசியல் முடிவாக இல்லாத பட்சத்தில், அடுத்து வரும் அரசாங்கம் அந்த முடிவை செயல்படுத்த வைக்கப் பட வேண்டும்.”

மாநில அரசு, சமச்சீர் கல்விலை நாங்கள் கைவிடவில்லை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்துவோம் என்று தெரிவிக்கிறார். ஆனால், உச்ச நீதிமன்றம், இந்த அண்டு செயல்படுத்துவதற்கான வழி வகைகளை ஆராயச் சொல்லித் தான் தீர்ப்பளித்திருக்கிறதே தவிர, அடுத்த ஆண்டு எப்படிச் செயல்படுத்துவத என்பதைப் பற்றிப் பேசவில்லை.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு கமிட்டியை அமைத்தாலும், அந்தத் தீர்ப்பை சரியாக புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை எப்படி அமல்படுத்துவது என்பதை ஆராயுங்கள் என்றுதான் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததே ஒழிய, இந்தப் பாடப்புத்தகங்களை ஆராயுங்கள் என்று சொல்லவேயில்லை. ஆனால், கமிட்டியின் (பொம்மைக் கமிட்டி) முதல் கூட்டம் நடந்த அன்றே, உச்ச நீதிமன்றம், பாடப்புத்தகங்களை ஆராயச் சொன்னதாகவே புரிந்து கொண்டு, அந்த நோக்கத்திலேயே கமிட்டி செயல்பட்டிருக்கிறது.
2011-2012 கல்வி ஆண்டுக்கு இந்தப் பாடப்புத்தகங்களை பயன் படுத்த முடியுமா என்று ஆராயுங்கள் என்று சொல்லாத போது, கமிட்டி அதைத்தான் செய்தது. அது மட்டுமல்ல, இந்தக் கமிட்டியின் பெரும்பாலான வேலைகளையும், அந்தக் கமிட்டியின் வரைவு அறிக்யையும் மாநில அரசின் கல்வித்துறைச் செயலாளரே தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
 2502862
தேர்தல் முடிவுகள் மே 13 அன்று வெளியானது. 16 மே அன்று புதிய அரசு பொறுப்பேற்றது.   முதல் கேபினெட் கூட்டம் 22 மே அன்று ஒரு மணி நேரம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சமச்சீர் கல்வி உட்பட பல்வேறு விஷயங்கள் ஒரு மணி நேரம் விவாதிக்கப் பட்டுள்ளன. உடனடியாக 23 மே அன்று, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு கைவிடுவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய புத்தகங்கள் அச்சடிக்க ஆணை வழங்கப் பட்டுள்ளது என்பதை மறந்து விடக் கூடாது.
சமச்சீர் கல்விக்கு பதில் பழைய புத்தகங்களையே பயன்படுத்தலாம் என்ற மாநில அரசின் முடிவு எந்த விதமான நிபுணர் குழுவின் ஆய்வுக்கும் உட்படுத்தப் படாமல், மறு ஆய்வு செய்யப் படாமல் எடுக்கப் பட்டது என்பது தெரிய வருகிறது. சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்க வேண்டும் என்ற இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம், தள்ளி வைப்பது என்ற போர்வையில் சமச்சீர் கல்வியை கைவிடுவது என்றே எண்ணத் தோன்றுகிறது.   உண்மையில் சமச்சீர் கல்வி கைவிடப் படவில்லை என்று அரசு நினைத்திருக்குமேயானால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அது அமல்படுத்தப் படும் என்பதை சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை என்பதே, சமச்சீர் கல்வியை கொண்டு வந்த அந்த சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதே நோக்கம் என்பது புலனாகிறது.
சமச்சீர் கல்வியை தள்ளி வைக்கும் சட்டத் திருத்தம் செயல்படுத்தப் படுமேயானால், இளம் உள்ளங்களில் அது பெரும் குழப்பத்தை எற்படுத்தும், ஆகையால் நாங்கள் அதை அனுமதிக்க முடியாது.
தனித்தனியாக கருத்து தெரிவித்த கமிட்டி (பொம்மைக் கமிட்டி) உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. கமிட்டி கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த தமிழக அரசு தேர்ந்தெடுத்த ஒரு உறுப்பினர் (விஜயலட்சுமி சீனிவாசன்) சமச்சீர் கல்வி காலத்தின் தேவை என்றும், தற்போது உள்ள, ஆங்கிலோ இந்திய மெட்ரிகுலேஷன் பள்ளி முறைகள் முழுமையானதல்ல என்றும், தேசிய கல்விக் கொள்கையின் படி அமைந்தவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவரது கருத்து கமிட்டியின் இறுதி அறிக்கையில் இடம் பெறாமல் தவிர்க்கப் பட்டுள்ளது.

டாக்டர் முத்துக்குமரனின் கமிட்டி ஒரு நீண்ட ஆய்வுக்குப் பின்னரே சமச்சீர் கல்விக்கான இந்த அறிக்கையை அளித்திருக்கிறது.   அந்தக் கமிட்டியின் அறிக்கையும் அப்படியே அமல்படுத்தப் படவில்லை. முத்துக்குமரன் கமிட்டியின் அறிக்கையை செயல்படுத்துவது தொடர்பாக ஒரு நபர் கமிட்டி ஒன்று அமைக்கப் பட்டு, அந்தக் கமிட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பல்வேறு பள்ளிகளை ஆய்ந்து அறிந்த பிறகே, 2010ல் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தலாம் என்று முடிவெடுக்கப் பட்டது. அதனால், மாநில அரசும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், சொல்வது போல, அவசர கோலத்தில் எடுக்கப் பட்ட முடிவு இது என்று எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தக் காரணங்களால், சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தலாம் என்ற சட்டத் திருத்தம் ரத்து செய்யப் படுகிறது.
சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை பள்ளிகள் 22 ஜுலை 2011க்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்றமும், கமிட்டி உறுப்பினர்களும் குறிப்பிட்டது போல, தேவையற்ற பாடப் பகுதிகளை நீக்கி விட்டு உரிய பாடப்புத்தகங்களை அரசு வழங்க வேண்டும்.
மாணவர்கள் தான் இந்த தேசத்தின் எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாநில அரசு நல்ல முடிவுகளை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை அடுத்து, இரண்டு இடது சாரிக் கட்சிகளுமே மேல் முறையீடு செய்யாதீர்கள் என்று ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பாடப் புத்தகங்கள் தரப்படாததால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். எந்தப் பாடத் திட்டத்தையாவது வைத்தால் போதும் என்கிற நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே, உடனடியாகப் புத்தகங்களை விநியோகித்து மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

கல்வி தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் விரிவான கல்விச் சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாடத் திட்டத்தில் நீக்க வேண்டியதை நீக்கியும், சேர்க்க வேண்டியதை சேர்த்தும் மூன்று மாதத்துக்குள் துணைப் பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இத்தீர்ப்பு வழி செய்துள்ளது.

இந்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கிவிட்டுப் பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரும், கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும், உச்ச நீதிமன்றம் விரைந்து, மேல் முறையீடு செய்துள்ளனர்.

அரசியலில், பிடிவாதம் பிடிப்பதும், போட்டா போட்டி போடுவதும் சகஜம் தான். ஆனால், இவர்களின் பிடிவாதத்தால் ஒன்றேகால் கோடி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் படுகிறது எனும் போது, இந்தப் பிடிவாதத்தை கண்டிக்காமல் எப்படி இருப்பது ?

ஒரு முழுமையான மாதத்துக்கு, எவ்வித பாடத்திட்டமும் கொடுக்கப் படாமல், மாணவர்கள் தினந்தோறும், வகுப்பறையில் ஆட்டமும் பாட்டமும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இதற்குக் காரணமாக ஒரு மாநில அரசு இருக்கிறதென்றால் அந்த அரசு யாருக்கான அரசு ?

அந்த ஆசிரியர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்… … !! இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த மாணவர்களுக்கு இது போல பாடத்திட்டம் வழங்காமல் இருந்தால், மீதம் உள்ள காலத்துக்குள் அத்தனைப் பாடப்பகுதியையும் எப்படி முடிப்பார்கள் ? அவசர கோலத்தில் பாடப்பகுதிகள் முடிக்கப் படும் அல்லது, மாணவர்களின் விளையாடும் நேரம் பறிக்கப் பட்டு, அந்த நேரத்தில் பாடம் எடுக்கப் படும். எப்படி இருந்தாலும் இழப்பு மாணவர்களுக்குத் தானே ? இதனால் மாணவர்ளுக்கு ஏற்படும் கடும் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பாக முடியும் ?
 31812484
மேலும், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போதே, தமிழக அரசு, புதிய பாடப்புத்தகங்களை அச்சடித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. இவ்வாறு பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் செயலே, தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து செயல்பட்டதைக் காட்டியது.

சமச்சீர் கல்விக்காக அச்சடிக்கப் பட்ட பாடப்புத்தகங்களுக்கு ஆன செலவு ஒரு புறம் இருக்கட்டும். சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாட்டேன் என்று தமிழக அரசின் சார்பில் வாதாட, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடிய பி.பி.ராவுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் வாதாடினால் 5 லட்ச ரூபாய் பீஸ்.   இது போக அவருக்கு சென்னைக்கு வருவதற்கு, முதல் வகுப்பில் விமான டிக்கெட், அவர் ஜுனியருக்கும் முதல் வகுப்பில் விமான டிக்கெட், சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கான அறை என்பது போன்ற விவகாரங்களுக்கு ஆகும் செலவுகளும் மக்களின் வரிப்பணம் தானே.. ?

தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் அடங்கிய குழு, தற்போது டெல்லி சென்றிருப்பதும், மக்களின் வரிப்பணத்தில் தானே ? இவர்களுக்கு ஆகும் குறைந்த பட்ச செலவான 30 லட்ச ரூபாயும் மக்கள் வரிப்பணம் தானே ?

தமிழகத்தின் உரிமையை காவிரி நடுவர் மன்றத்தில் நிலைநாட்ட வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் பீஸ் கேட்கும் வழக்கறிஞரைக் கூட அமர்த்தலாம்.   ஆனால், தற்போது தமிழக அரசு செய்யும் இந்த தண்டச் செலவு, ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட்டில் இருக்கையில் ஏற்படும் கூடுதல் தண்டச் செலவு தானே….     இத்தகைய செலவுகளை வறட்டுப் பிடிவாதத்திற்காக தமிழக அரசு செய்கிறதென்றால், தமிழனுக்கு என்றுமே விடிவு காலம் கிடையாதா என்று தலையில் அடித்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது.

கூட்டணிக் கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் ஒரே குரலில் மேல் முறையீடு செய்யாதீர்கள் என்று குரல் கொடுத்து விட்டார்கள்.   சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம் என்று மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தி விட்டன.   தினமணி நாளேடு தலையங்கம் எழுதியது. ஊடகங்கள் குரல் கொடுத்தன.

பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், தமிழக அரசின் தேவையற்ற வழக்கு காரணமாக, கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி, ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்குக் காரணம், வறட்டுப் பிடிவாதமாக இல்லாமல், வேறு என்னவாக இருக்க முடியும்.

அய்யன் வள்ளுவனின் வாக்கை ஜெயலலிதா படித்திருப்பாரா என்று தெரியவில்லை. இருந்தாலும், அவருக்கு அதைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.