மருத்துவர் அன்புமணி அரசியல்வாதிகளில் தான் ஒரு மருத்துவர் என்பதை பொதுவிடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு தடை, மீறினால் அபராதம் என்று இப்போது கொண்டு வந்துள்ள முனைப்பான சட்டத்தால் முழுமையாக நிரூபித்திருக்கிறார்.
பொதுவிடங்களில் புகைப்பிடித்தலைத் தடை செய்தமை குறித்து புகை ஆர்வலர்களும், புகை விரும்பாத ஆர்வலர்களும் மாறி, மாறி சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். தடை செய்தமைக்கான காரணம், புகை விடுவதால் வெளி வரும் நச்சுப் பொருளான நிகோடினால், அப்புகையை வெறுமனே சுவாசிக்கும் அக்கம்பக்கத்தினர் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு என்கிறது சுகாதாரத் துறை.
புகை பிடிப்பவர்களை அதிகம் தாக்குவது புற்றுநோயும், இதய நோயும் தான். புற்று நோயில் தொண்டை புற்று நோய், நுரையீரல் புற்று நோய், வாய்ப்புற்று நோய், கணையத்தில் புற்று நோய் என்று நிகோடினால் தாக்கப்படும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இந்தப் புற்று நோய், வகை.. தொகையில்லாமல் தாக்கி வருகிறது. புகையிலையினால் அதிகப்பட்சமாக வாய்ப்புற்று நோய் தோன்றுகிறது. புகையிலையிலும் இந்த நிகோடின்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் மனித குலத்தின் முக்கிய நோய் எதிரிகளில் ஒருவர் இந்த நிகோடின்தான்.
பொதுவாகப் புகைப் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களை கணக்கெடுத்தால் அதில் அதிகம் பேர் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அந்தப் பழக்கம் எப்படி அமைந்ததெனில், அது மரபு ரீதியாக, வழி வழியாக ஆண்களுக்கு ஒரு அடையாளமென்ற முட்டாள்தனமான நம்பிக்கை இளைஞர்களுக்குள் ஏற்படுவதினால்தான் என்று நினைக்கிறேன்.
மேலும், மிக, மிக எளிதாக தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகளில் கிடைப்பதான ஒன்று என்பதாலும்தான் அந்தச் சனியனான ‘வெண்குழல்’ இளைஞர்களின் கைகளில் அதிகம் தவழ்ந்து வருகிறது. அடிப்படையில் மனோதிடத்தை இது அதிகப்படுத்துவதாகச் சொல்லித்தான் நிறைய ஆண்கள் இதனைக் குடிக்கிறார்கள். இந்தத் தத்துவத்தை இவர்களுக்கு உணர்த்தியது, சந்தேகமே இல்லாமல் நமது திரையுலகச் ‘சக்கரவர்த்திகள்’தான்.
திரைப்படங்களில் தங்களது ஆஸ்தான ஹீரோக்களின் புகை விடும் ஸ்டைலை பார்த்துத்தான் ரசிகர்களும் புகைப்பழக்கத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டதென்னவோ மறக்க முடியாத உண்மைதான்.
எனது சொந்தக்கார அண்ணன் ஒருவர் அவர் உயிரோடு இருந்தவரையிலும் ஒரு நாளைக்கு பத்து பாக்கெட் சிகரெட் குடிப்பார். ஒன்றை கீழே போடுகிறார் எனில் இன்னொன்றை பற்ற வைத்துவிட்டுத்தான் செய்வார். தீவிரமான சிவாஜி ரசிகர். “புதிய பறவை” படத்தில் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” பாடல் காட்சியின்போது செளகார்ஜானகியைப் பார்த்தபடியே சிவாஜி ஸ்டைலாக புகைவிடும் ‘நடிப்பைப்’ பார்த்துதான், தனக்குப் புகை மீது ‘வெறி’ வந்ததாக ‘உயிரோடு இருந்தபோது’ பெருமையாகச் சொன்னார்.
இப்படி சில அப்பாவிகள் வரும் ஆபத்து தெரியாமல் அதனைத் தொட்டுவிட்டு பின்பு அதனைவிட முடியாமல் இப்போதும் தவிக்கிறார்கள். எவ்வளவு விலையேற்றினாலும் வேறு ஏதாவது செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிகரெட்டுக்கென்றே தனி பட்ஜெட் போட்டுவிடுகிறார்கள் புகை விரும்பிகள்.
நமது வலையுலகத்திலும் பல இளைஞர்கள் வெண்குழல் பற்ற வைக்கும் நாயகர்களாகவே இருக்கிறார்கள். “புகை பிடிக்காதே தம்பி..” என்று சொல்ல வேண்டியவர்களே, “சிகரெட் இருக்கா..?” என்று கேட்டு வாங்கும் கொடுமையும் நமக்குள் நடக்கிறது.
நான் சந்தித்த பல பதிவர் சந்திப்புகளிலும் புகை விடுவதற்காகவே இடை, இடையே தப்பித்து ஓடும் பதிவர்களை நினைத்துக் கோபப்பட்டிருக்கிறேன். சிறந்த எண்ணங்களை, எழுத்தாக்கி, அந்த எழுத்தை ‘மீண்டும், மீண்டும் படிக்க வைக்கும் போதை’யாக மாற்றுவதைப் போன்ற எழுத்தாற்றல் மிக்க அசாத்தியத் திறமை படைத்தப் பதிவர்களெல்லாம், இந்தச் சனியனைக் கையில் தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாகத்தான் வருகிறது.
தனி மனித உரிமை.. தனி மனித உரிமை என்று கூச்சல் போட்டு, கோஷம் கொப்பளிக்க, கொடி பிடிப்பதற்கு இது ஒன்றும் நிஜமான தனி மனித உரிமைப் பிரச்சினையில்லை. சமூகப் பிரச்சினை.. “என்ன நோய் வருமாம்ல.. வரட்டும்.. வந்துட்டுப் போகட்டும்.. பார்ப்போம்.. எத்தனையோ சமாளிச்சிருக்கோம். இதை சமாளிக்க மாட்டோமா..” என்று வாய்ச்சவடால் விடுவதற்கு இது ஒன்றும் காசு, பணம் பிரச்சினையில்லை.. உயிர் பிரச்சினை..
புகை பிடிக்கின்ற அனைவரையுமே புற்றுநோய் தாக்குவதில்லை. ஆனால் மற்ற ஏதேனும் ஒரு நோய் தாக்கி விடுகிறது. சராரசியாக 45-லிருந்து 55 வயதுவரையில் மாரடைப்பு வந்து இறந்து போனவர்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தீர்களானால், அதில் முக்கால்வாசிப் பேர் புகைப்பிடித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
நோய் வரும். தாக்கும்.. என்பதெல்லாம் நன்கு தெரிந்த பின்பும் புகை விடுபவர்கள் அதனை ஏற்க மறுத்து அது எங்களது உரிமை என்ற ரீதியில் பேசுவது எனக்கு முட்டாள்தனமாகப்படுகிறது. நோய் வராவிட்டால் சந்தோஷம்தான்.. ஆனால் வந்துவிட்டால்..? இந்த ரீதியில் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.. கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுவோமே…
இன்றைய பொருளாதாரச் சூழலில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாள் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தாலே ஒரு மாச சம்பளத்தை மொத்தமாக கொடுத்துவிட்டுத்தான் வர வேண்டும். அந்த அளவுக்கு மருத்துவமனை, உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகளின் கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன. இதில் புகையினால் நோய் என்று வந்து நாம் மருத்துவமனையை நாடுவது, கண்ணை விற்று பின்னர் சித்திரம் வாங்கும் கதைதானே..
‘எப்படியும் நாங்கள் பொழைச்சுக்குவோம்’ என்று கும்மியடிப்பவர்கள், படுக்கையில் வீழ்ந்தால் தலகாணியை நகர்த்தி வைக்கக்கூட ஒரு ஆள் உடன் இருக்க வேண்டும் என்பதனை தயவு செய்து மறக்க வேண்டாம்.
மருத்துவமனைக்கு வந்த பின்பு உங்கள் சிகரெட்டுக்கு லைட்டர் துணையுடன் பற்ற வைத்தவரோ, அல்லது சிகரெட் வாங்கிக் கொடுத்தவரோ 24 மணி நேரமும் உடன் இருந்து உங்களைப் பார்த்துக் கொள்ளப் போவதில்லை. கஷ்டப்படப் போவது முழுக்க, முழுக்க நீங்களும், உங்களது குடும்பத்தினரும் மட்டும்தான்.
எவ்வளவோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் உங்களது சேமிப்பு, நீங்கள் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் கண் முன்பே கரையும் கொடுமையை மத்திய தர வர்க்கம், அதற்கும் கீழான வர்க்கத்தினரெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது. நமது சேமிப்புதான் நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பாதுகாப்பு. அதையும் நாமே செலவு செய்துவிட்டு பின்பு நமது குழந்தைகளை பிற்காலத்தில் பணத்திற்காகக் கஷ்டப்பட வைக்கவும் கூடாது.
ஒருவிதத்தில் இந்தப் புகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து குடும்பத்தினரையும் சேர்த்து கஷ்டப்படுத்துவது அவர்களின் தனி மனித உரிமையை பாதிக்கும் விஷயம்தானே.. எப்படி உங்களுக்குப் புகைப் பிடிக்கும் பழக்கம் தனி மனித உரிமை என்கிறீர்களோ, அதே போலத்தானே உங்களது குடும்பத்தினருக்கும் இருக்கும்..
மருத்துவமனை வாழ்க்கை என்பது சாதாரணமா…? நினைத்துப் பார்த்தால் திரும்பவும் அந்த வாழ்க்கையை வேறு எந்த மனிதரும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் அனுபவித்த எந்தவொரு மனதும் நினைக்கும். நானும் அதனால்தான் சொல்கிறேன்.
எனது தந்தை எப்போதும் சார்மினார் சிகரெட்தான் குடிப்பார். சிகரெட்டிற்கு காசு இல்லாதபோது சொக்கலால் பீடி குடிப்பார். இடையில் கொஞ்ச நாட்கள் சுருட்டு பிடித்தார். இப்படி அனைத்து வித வழிகளிலும், ‘புகையை விடத்தான் செய்வேன். என்னைக் கேட்கவே ஆள் இல்லை..’ என்று வீட்டில் தனி ராஜாங்கமே நடத்தினார்.
அந்த சிகரெட்டை வாங்கிவர நான்தான் போக வேண்டும். நான் இல்லாவிடில் எனது அம்மாவை அனுப்புவார். ஆனால் தான் போக மாட்டார். அவர் ஒருவகையான ஆணாதிக்கத்தில் இருந்தவர். ஆனால் பாசமானவர். இருந்தும் என்ன செய்ய..? ஆடிய ஆட்டமெல்லாம் ஒரு நாள் ஓய்ந்து போனது.
தொண்டை புற்று நோய் வந்து சாப்பிட முடியாமல், வயிற்றில் டியூப் போட்டு.. அதில் பால் ஊற்றி பின்பு, அதிலேயும் செப்டிக் ஆகி.. முடியாமல் போக.. பசி.. பசி.. பசி.. என்று பசியால் துடித்த துடிப்பு இருக்கிறதே.. சாப்பிட சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாமல் சாவது எவ்வளவு கொடுமை என்பது தெரியுமா உங்களுக்கு? பட்டினியாக இருந்தே சாவைச் சந்தித்த அந்தக் கொடுமையை என்னால் மறக்கவே முடியவில்லை, நான் இந்தக் குடி, புகை, புகையிலை, மதுவை அடியோடு வெறுப்பதற்குக் முதல் காரணம் இது ஒன்றுதான்.
புகை பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது என்பதனை வளர்ந்து வரும் சமுதாயத்தினரிடம் நாம் சொல்லிப் பழக்க வேண்டிய இந்தக் காலத்தில், வீட்டுக்குள்ளே இருந்து குடிச்சுத் தொலை என்றால் எப்படி?
வெளியில் பஸ்ஸ்டாண்டில், மக்கள் கூடும் இடங்களில் புகையை சுவாசிக்கும் வாய்ப்புள்ள பொதுமக்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் அந்தப் புகையை இனிமேல் அளவுக்கு அதிகமாகப் ‘பிடிக்கப்’ போகிறார்கள். நமது ஆணாதிக்கம் சார்ந்த சமூகத்தில் ஏற்கெனவே குடிகார ஆண்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது அரசே உரிமம் கொடுத்துவிட்டதைப் போல் இருக்கிறது இந்த விதிமுறை.
பிள்ளைகளுக்கு அடையாளங்களாக இருக்க வேண்டிய அப்பன் வீட்டுக்குள்ளேயே இருந்து சிகரெட் குடித்தால், பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? அந்தப் பழக்கம் தவறு என்ற மனப்பான்மை அவர்களுக்குள் எப்படி ஏற்படும்? ‘நம்ம அப்பாவே குடிக்கிறார்.. நாமளும் குடிப்போம்’ என்றுதான் இப்போது விடலைப் பசங்கள் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதனை ஊக்குவிப்பதைப் போல் உள்ளது மறைமுகமான இந்த அனுமதி. இதற்கு என்ன தீர்வு என்பதையும் நாம் இப்போது யோசிக்க வேண்டும்.
இந்தப் புகையால் மட்டும்தான் நோய் வருகிறதா..? பேருந்துகள் விடும் கட்டுபாடற்ற புகையினாலும்தான் நோய் வருகிறது. அதனால் பேருந்துகளை தடை செய்துவிடுவார்களா என்றெல்லாம் நமது ‘வலையுலக சிங்கங்கள்’ கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
புற்றுநோய் தாக்கியவர்களில் தானாகவே நோயை வரவழைத்துக் கொண்ட வகையினர்தான் அதிகம் என்பது மருத்துவக் குறிப்புகள் சொல்லும் உண்மை. எந்தவிதமான கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறைந்த சதவிகிதத்தினர்தான். இதற்கு யாரையும் காரணமாகச் சொல்ல முடியாது. இந்தக் குறைந்த சதவிகிதத்தினருக்காக பெரும்பான்மை சதவிகிதத்தினர் செய்வது சரி என்று சொல்லிவிட முடியுமா என்ன..?
மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு கிராமம் முழுக்கவே சிறுநீரகத்தில் கோளாறு, பலருக்கு புற்று நோய், சிலருக்குத் தோல் நோய், இன்னும் பலருக்கு யானைக்கால் நோய் என்று பல வியாதிகளும் ஒட்டு மொத்தமாகத் தாக்கியிருக்கும் விஷயங்களும் இப்போது பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன.
இவைகள் அந்தந்தப் பகுதிகளில் நிலவி வரும் தட்பவெப்பநிலை, உண்ணும் உணவு, பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் பாதிப்பாகத்தான் இருக்கும். இல்லை என்று சொல்லவில்லை. இதனால் ‘முதலில் அங்கே சரி செய்துவிட்டு பின்பு இங்கே வா..’ என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்தானே..
“ஏன் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். சிகரெட் குடித்தால் புற்றுநோய்.. இதே புற்றுநோய் மதுபானம் அருந்தினாலும் வருகிறதே.. அதனை தடை செய்யுங்கள். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து சம்பாதிக்கத் தெரிகிற அரசாங்கத்திற்கு சிகரெட் பிடிப்பது மட்டும்தான் குற்றமாகத் தெரிகிறதா..?” என்றும் வாக்குவாதங்கள் தொடர்கின்றன.
இதுவும் தவறுதான்.. ஆனால் தவறு என்று நினைப்பவர்கள் ஆட்சியில் இல்லாத காரணத்தினால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போதைய தமிழக நிலவரப்படி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால், நமது கஜானா அடுத்த நொடியே காலியாகிவிடும். அடுத்த மாத இலவசத் திட்டங்களுக்கு பைசா இருக்காது. இலவச் திட்டங்கள் இல்லாமல் போனால் அடுத்து மறுபடியும் ஆட்சிக்கு வர முடியாது.. எது முக்கியம் நாம் ஆட்சிக்கு வருவது முக்கியமா? அல்லது மக்கள் உயிர் முக்கியமா..?
இந்தப் பட்டிமன்றத்தில் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவது மட்டுமே முக்கியம். மக்கள் குடிகாரர்களாக மாறி சாவது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். இனிமேல் உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது நீங்கள்தான். ஆனாலும் தடை செய்யப்பட அதிகாரமுள்ள துறைகளில், தடை செய்து காப்பாற்றப்பட வேண்டிய சில உயிர்களையாவது காப்பாற்றலாமே.. அது சரிதானே.. அதைத்தான் மருத்துவர் அன்புமணி இப்போது செய்திருக்கிறார்.
இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு ஒன்றுதான். அது சிகரெட், பீடி, புகையிலை, மது போன்ற நோய்வாய்ப்பட வாய்ப்புள்ள அனைத்து வகை போதை வஸ்துக்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுதல் வேண்டும். ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை.
நாட்டின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் கிடைக்கும் வருவாயில் 40 சதவிகிதம் இந்த வஸ்துக்கள் மூலமாகவே வருகிறது என்கிறார்கள். உண்மை நிலவரம் தெரியவில்லை. பணம் கொட்டும் துறையாக வளர்ந்து செழித்திருக்கும், இந்த புகையிலை சார்பான தொழில்களை தடை செய்து அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டத் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டுமெனில் அதற்கெல்லாம் தொலைநோக்கோடு செயல்படக்கூடிய ஒரு அரசாங்கம் வேண்டும்.
அடுத்து ஆட்சியில் அமர்த்துவது முதல் மகனையா அல்லது, இரண்டாவது மகனையா.. மகளா, பேரனா, வளர்ப்பு மகனா, உடன் பிறவா சகோதரியா, சகோதரியின் உடன் பிறந்த சகோதரர்களா, ராஜகுருவா என்றெல்லாம் நமது அரசியல்வாதிகளின் சிந்தனை சென்று கொண்டிருக்கும்போது, இந்த தொலை நோக்குப் பார்வை அவர்களுக்கு எங்கிருந்து வரும் என்பது எனக்குத் தெரியவில்லை.
முன்னாள் அமைச்சர் அன்புமணி பொது இடங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை இந்தச் சட்டத்தின் மூலம் காட்டிவிட்டார்.
இனி நாம் நமது தாய்க்குலங்கள் மீதுதான் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லத்தில் கண்ணியத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை எங்களுக்குத்தான் உள்ளது என்ற நோக்கில் தாய்க்குலங்கள் வீட்டிற்கு உள்ளேயும் இதே போல் தடை உத்தரவு கொண்டு வந்தார்களானால், அடுத்த இரண்டாவது தலைமுறையிலாவது புகையிலை இல்லாத சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.
அப்படியொரு சூழலை நாம் உருவாக்க நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும், போதைப் பொருட்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வை நமது பிள்ளைகளிடத்தில் நாம் கற்பிக்க வேண்டும். அது நமது கடமையும்கூட..
போதைப் பொருட்களை ஒழிப்போம்..
புகையில்லா உலகத்தைக் காண்போம்..
பசுமைத்தாயகத்தில் இணைவோம் புது உலகம் படைப்போம்...