நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Saturday, September 21, 2013

"வன்னியர் - மதமும் அரசியலும்!"



இந்து மதம் என்கிற ஒரு கலாச்சார வாழ்க்கை அல்லது இறை நம்பிக்கை என்பனவற்றை வன்னியர்கள் எதிர்ப்பதாக நான் கருதவில்லை. 

வன்னியர்களில் சைவ, வைணவ, நாட்டார் தெய்வ கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மிக அதிகமானோர் இருக்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். கிறித்தவர்களும் இருக்கிறார்கள்.

வன்னியர்கள் அக்னியில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னியர்களுடைய தனிப்பட்ட இனக்குழு அடையாளம். வன்னியர்கள் மட்டும்தான் நெருப்பில் தோன்றியதாகக் கருதப்படும் திரௌபதி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். இந்துக்களில் மற்றவர்கள் இதனைச் செய்வது இல்லை.

திரௌபதி அம்மன் வழிபாட்டில் போத்துராஜா போர்மன்னன் மற்றும் முத்தால ராவுத்தன் ஆகியோர் திரௌபதியின் பாதுகாவலனாகக் கூறி வழிபடப்படுகின்றனர். இதில் போத்துராஜா என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும். முத்தால ராவுத்தன் என்பது ஒரு முஸ்லீம் வீரனைக் குறிக்கிறது. இந்த வழிபாட்டு முறை வன்னியர்களின் தனிப்பட்ட பண்பாடாகும்.

வன்னியர்கள் மாற்று மதத்தினை வேறுபாட்டுடன் பார்ப்பவர்களாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் நாகூர் த்ர்கா, வேளேங்கண்ணி மாதா ஆலயங்களுக்கு சென்று வழிபடுகிறார்கள். பலர் தமது வீடுகளில் இந்த படங்களை மாட்டி வைத்துள்ளனர். வீடுகளில் குழந்தைகளுக்கு உடல்நலம் இல்லை என்றால் - இஸ்லாமிய தர்காக்களில் சென்று ஓதிக்கொண்டு வருவதை பல வன்னியர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வன்னியர் சங்கமோ பாட்டாளி மக்கள் கட்சியோ மதத்தை தமது கொள்கையில் நுழைக்கவில்லை. எல்லா மதங்களையும் - கடவுள் மறுப்பையும் கூட ஏற்றவர்களாகவே நாம் இருக்கிறோம். 

மருத்துவர் அய்யா அவர்கள் பொங்குதமிழ் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்தும்போது தேவாரம், திருவாசகம், கிறித்தவர்களின் தேம்பாவணி, இஸ்லாமியர்களின் உமறுப் புலவர் பாடல்கள் என எல்லாவற்றையும் பாடச்செய்து, மருத்துவர் அய்யா அவர்கள் எல்லாவற்றையும் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழர்களின் பொங்கல், இஸ்லாமியர்களின் ரமலான், இறித்தவர்களின் இயேசு பிறப்பு என எல்லாவற்றையும் கொண்டாடுகிறோம்.

இப்படி எல்லா மதங்களையும் நம்பிக்கைகளையும் சமமாக பார்ப்பதில் என்ன தவறு? இதனை 'மாற்று மதங்களை தாஜா செய்கிறோம்' என்று சொல்வது நியாயமா?

நம்முடைய அரசியல் என்பது எல்லோரையும் சாதியாகப் பார்ப்பது. அதற்கேற்ப- எல்லா சாதிகளுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது. 

எனவே, வன்னியர்களைப் பொருத்தவரை செட்டியார், முதலியார், முக்குலத்தோர், ரெட்டியார், நாடார், பிள்ளைமார் போன்று 'இஸ்லாமியரும் ஒரு சாதி' என்பது போலத்தான் நாம் பார்க்கிறோம். 

செட்டியார், முதலியார், முக்குலத்தோர், ரெட்டியார், நாடார், பிள்ளைமார் எல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள். ஆனால், முஸ்லீம் மட்டும் நம்மைச் சேராதவர் என்று வன்னியர்கள் பார்க்கவில்லை. 

ஆனால், 'இந்துத்வா' என்று சொல்லப்படுவது மதம் அல்ல. அது ஒரு அரசியல். அந்த அரசியல் இந்துக்களை சாதியாக பிரிப்பதை எதிர்க்கிறது. மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்தவர்களும், இன்றுவரை தமிழ்நாட்டின் 69 % இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைப்பவர்களும் - நீதிமன்றங்களிலும் பத்திரிகைகளிலும் சமூகநீதிக்கு எதிராக சதி செய்பவர்களும் இந்துத்வ அரசியல் நிலைபாட்டில் உள்ளவர்கள்தான்.

வன்னியர்கள் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப - அதிகாரத்திலும் வளங்களிலும் தமக்குரிய பங்கினையும் உரிமையையும் அடைய வேண்டும் என்றால் - அதற்கு 'இந்துத்வ அரசியல்' ஒருபோதும் உதவாது என்கிற அடிப்படையை உணரவும்.

No comments: