நவம்பர் 23-11-201
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை எதையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அனைத்து சமூக, பொருளாதார விவரங்களையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஓராண்டு காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, நான்கு மாதங்கள் முடிந்து விட்டன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் நானும், நாற்பதுக்கும் மேற்பட்ட சமுதாயத் தலைவர்களும் முறையீடு செய்தோம். முதல்வர் எங்களிடம் உறுதியளித்தப்படி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை நடைபெற்று ஒரு மாதமாகிறது.
எனினும், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. இது, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை. முதல்வர் கருணாநிதிக்கும் இதில் உடன்பாடு உள்ளது. எனினும், அதற்கான ஆணையைப் பிறப்பிக்க எது தடையாக உள்ளது என்பது புரியவில்லை.
2011 ஜூன் மாதத்தில் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு ஏன் தனியாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்கலாம்.
மத்திய அரசின் கணக்கெடுப்பில் ஜாதிவாரியாக தலைகளின் கணக்கு மட்டும்தான் தெரியவரும். ஆனால், மாநிலத்தில் இடஒதுக்கீட்டு சலுகையைப் பெறும் வகுப்பினரை அளவிடும் வகையில், அனைத்து புள்ளி விவரங்களும் அடங்கிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவாகும்.
எனவே, இந்த இரண்டு கணக்கெடுப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள், உச்ச நீதிமன்றம் திருப்தியடையும் விதத்தில், தேவையான புள்ளி விவரங்களுடன் கூடிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், 69 சதவீத இடஒதுக்கீட்டுச் சட்டத்துக்கே ஆபத்து ஏற்படலாம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றால், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் நமது இடஒதுக்கீட்டிற்கே வேட்டு வைத்து விடுவார்கள். எனவே தாமதம் இன்றி, அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, புதிய சட்டம் இயற்ற வழிவகுக்க வேண்டும் என்று அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment