தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தவும், கூடுதல் கட்சிகளை இழுக்கவும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆயத்தமாகிவிட்டன. பா.ம.க.,வுக்கு தி.மு.க.,அதிமுக,தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலைவீசிவருகின்றன
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் களத்தில் குதித்தது. அ.தி.மு.க.,- ம.தி.மு.க., - விடுதலைச் சிறுத்தைகள் - தேசிய லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், தே.மு.தி.க., தனித்தும் போட்டியிட்டதால் மும்முனை போட்டி நிலவியது.தி.மு.க., வெற்றி பெற்று, பெரும்பாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் கட்சியின் தனித்துவத்தை இழக்காமல் 69 தொகுதிகளை கைப்பற்றியது. 13 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், ஆளுங்கட்சி கூட்டணியிடம் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு இழந்தது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறியது. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி தி.மு.க., கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தது.அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., - பா.ம.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டு 12 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் புகையிலை கம்பனிகளுடன் கூட்டு சேர்ந்து திமுக பா.ம.க வின் தொகுதிகளில் பல கோடிகளுக்கு மேல் பணத்தை இறைத்து தோற்கடிக்கபட்டது பா.ம.க
தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம் - மனித நேய மக்கள் கட்சி -அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்- இந்திய தேசிய லீக் -தேசியவாத காங்கிரஸ்- இந்திய குடியரசு கட்சி- வன்னியர் கூட்டமைப்பு - அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி - அம்பேத்கர் மக்கள் கட்சி - மதச்சார்பற்ற ஜனதா தளம்- இந்திய தேசிய குடியரசு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்- கிறிஸ்தவ மக்கள் கட்சி - தலித் மக்கள் முன்னணி - மறுமலர்ச்சி மக்கள் தமிழகம்- இந்திய குடியரசு கட்சி (தமிழ்நாடு)- ராஜிவ் மக்கள் காங்கிரஸ் - முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம், வன்னிய குல ஷத்ரிய நல அமைப்புகளின் மத்திய மையம் ஆகிய கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. போதாதகுறைக்கு காங்கிரஸ், பா.ம.க., - தே.மு.தி.க, ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இடம் பெறவைத்து, "மெகா' கூட்டணியை உருவாக்கி, தி.மு.க.,வை பொது எதிரியாக காட்டவும் அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
தற்போது தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் - புரட்சி பாரதம் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் - தேசிய லீக் - உழவர் உழைப்பாளர் கட்சி - விவசாய தொழிலாளர்கள் கட்சி - தமிழ் மாநில முஸ்லிம் லீக் - மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - அருந்ததியர் மக்கள் கட்சி - எம்.ஜி.ஆர்., கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் இடம் பெற்ற கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை கூட்டணியில் இல்லை என்பதால், அணியை பலப்படுத்த மீண்டும் பா.ம.க., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்கவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது.அதேபோல் காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை, எந்த அணியில் அதிக சீட்டுகளும், ஆட்சியில் பங்கும் தருகிற கட்சிகளோடு கூட்டணி வைக்கவும் தயாரான மனநிலையில் உள்ளது.
கட்சி ஆரம்பித்த நிலையில் இருந்து தனித்து தான் போட்டி என்ற லட்சியத்துடன் களமிறங்கிய தே.மு.தி.க.., பா.ம.க,காங்கிரசு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி அமைக்கவும் விரும்புகிறது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் முறிவு இல்லை என்றால் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவும் தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது.
கோட்டையில் முதல்வர் கருணாநிதியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசியது, அரசியல் களத்தில் கூட்டணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அதிரடி பேச்சு, காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.கூட்டணி ஆட்சி அமைக்கும் பேரத்தை சட்டசபை தேர்தலில் முன்னிலைப்படுத்த காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளதும் அக்கட்சி தொண்டர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் கேட்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதால், தேர்தல் பரபரப்பு இப்போதே துவங்கிவிட்டது.
No comments:
Post a Comment