திசம்பர் 26-2010 (ஞாயிறு)சென்னை எத்திராசு கல்லுரி எதிரிலுள்ள காஞ்சி உணவகத்தில் நடந்த களப்பணியளார்கள் பயிற்சி முகாமில் வாசித்த கவிதை
அருமைத் தோழர்களே! அருந்தமிழ்ச் சொந்தங்களே!
சமூக முன்னேற்றச் சங்கம் சங்கமிக்கும் இவ்விழாவில்.
உங்கள் அனைவரையும் ஒன்றாகக் காண்பதனால்
உள்ளம் நிறைகின்றேன்: உணர்வுகளால் சிலிர்க்கின்றேன் - உங்கள்
ஒவ்வொருவர் முகம் பார்த்தும் உளமார வணங்குகின்றேன்!
சத்திரியச் சமுத்திரத்தில் சீறியெழும் பேரலைநான்
பாட்டாளிகளின் படைகளுக்குப் பாட்டிசைக்கும் பாவலன் நான்
ஏத்தப் பாட்டுக்கெல்லாம் எதிர்ப்பாட்டு பாடிக்கொண்டு
ஏரிக்கரைகளின் மீது இறுமாந்து நடந்தவன் நான்.
உழைப்பாளிக் கூட்டத்தில் உதிரியாய்க் கிடந்தவன் நான்
ஒடுக்கப்பட்டுக் கிடந்து ஓலமிட்டு அழுதவன் நான் - என்
கருத்தறியா வயதினிலே கால்சட்டைப் போட்டுக்கொண்டு
காட்டுப்பாக்கம் மண்ணில் கால் தேய நடந்தவன் நான்!
மருத்துவர் அய்யா எனும் மாபெரும் இடிமுழக்கம்
மஞ்சள் மேகம்போல் மேடையிலே ஏறுகையில்
உத்திரமேருரையே உலுக்கி எடுப்பது போல்
அய்யா அய்யா என்று ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில்
யார் அந்த அய்யா? என்று எட்டி எட்டிப் பார்த்தவன் நான்!
அய்யாவின் கால்பட்ட அத்தனைக் கிராமங்களும்
ஆர்ப்பரித்து அணிதிரண்ட அதிசயத்தை நான் பார்த்தேன்!
வெந்ததைத் தின்றுவிட்டு விதிவந்தால் சாவோம் என்ற
வன்னியச் சமூகத்தை விழிக்கவைத்த வெடிமுழக்கம்!
உத்திரமேரூர் மண்ணில் உருவான நாள் முதலே
மருத்துவர் அய்யாவை மனதிலே ஏந்திக் கொண்டேன்! -இன்று
தமிழினப் போராளியின் போர்ப்படையில் ஒருவன் நான் - உங்கள்
தமிழ்க்குடிதாங்கியின் தடம் பற்றி நடப்பவன் நான்!
திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் என்றாலும் - எங்கள்
தைலாபுரத்தைப் பாடினால்தான் தமிழ் மணக்கும் என்பவன் நான்!
தமிழினத்தின் துயர்துடைக்கும் காற்றைப் பாடாமல்
தமிழ் மண்ணை உயிர்ப்பிக்கும் ஆற்றைப் பாடாமல்
தமிழ்மொழிக்கு நீர்சுரக்கும் ஊற்றைப் பாடாமல்
தமிழ்ப் பகையைச் சுட்டெரிக்கும் தீயைப் பாடாமல்,
ஒற்றை வரியிலே உரத்துச் சொல்வதெனில் - எங்கள்
தைலாபுரத்துத் தந்தை பெரியாரைப் பாடாமல்
என்பகல் முடிந்ததில்லை: என் இரவு விடிந்ததில்லை!
எதனால் இப்படி நீ எப்போது பார்த்தாலும்,
திண்டிவனத்தையே அண்டிக் கிடக்கின்றாய்?
எல்லோருக்கும் பொதுவான உயர்தமிழ்க் கவிஞர் நீ
எவரோ ஒரு தலைவரை எப்போதும் புகழலாமா?
அணி மாறி அரசியலில் ஆதாயம் பார்ப்பவரை,
கூட்டணி தர்மத்தையே குண்டு வைத்துத் தகர்பவரை
அணியிலே சேர்ந்த பின்பு அடங்கிப் போகாதவரை,
அரசியல் வணிகராக ஆகிவிட்ட ஒருவரை,
அய்யா அய்யா என்று அவர் பினனால் போகிறீரே
தைலாபுரத்துக்கு அப்பால் தலைவர்களே கிடையாதா?
திண்டிவனம் இல்லாமல் தமிழ்நாடு விடியாதா?
என்றெல்லாம் ஒருவர் எனைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.
யாரப்பாநீ என்று நான் அவரைக் கேட்டேன்.
வாணியம்பாடியில் இருந்து வந்திருக்கும் முருகன் நான்
வாழ்வாங்கு நான் வாழ வகை செய்த கட்சியிலே
வண்டு முருகனைப் போல் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.
நீட்டி முழக்கி நான் நுரைபொங்கப் பேசுவதால்
நுரைமுருகன் என்கிற நல்ல பெயர் எனக்குண்டு!
என்று சொன்னவரை ஏறிட்டு நான் பார்த்தேன்!
வாருங்கள் முருகா வாய்கிழிந்த நுரைமுருகா - அரசியலில்
வாழத் தெரியாமல் வண்டுமுருகன் ஆனவரே
குதர்க்கமாய் எனைப் பார்த்துக் கேள்விகளா கேட்கின்றாய்?
தைலாபுரத்துக்கப்பால் தலைவர்களே இல்லையா?
என்றா எனைப் பார்த்து ஏதோவொரு கேள்வி கேட்டாய்!
தைலாபுரத்துக்கப்பால் ‘தலைகள்’ இருக்கிறது ‘தலைவர்கள்’ இல்லை
தமிழ்நாடு முழுவதும் ‘கட்சிகள்’ இருக்கிறது’இயக்கங்கள்’ இல்லை!
தடிகள் ஒவ்வொன்றிற்கும் ‘கொடிகள்’ இருக்கிறது’கொள்கைகள்’ இல்லை
பேச வேண்டியதைப் பேசுவோர் இல்லை!
போராட வேண்டியவை நிறைய இருக்கின்றது
போராடித் தீர்வுகாணப் போராளிகள் இல்லை? - இப்படி
இருக்கக் கூடாத யாவும் இருக்கின்ற காரணத்தால்
இருக்க வேண்டிய எதுவும் இல்லாத காரணத்தால்
ஈரோட்டுப் பெரியாரின் எண்ணக் குமுறல்களை
ஈடேற்ற வந்த எங்களது போராளி
மருத்துவர் அய்யாவே மாபெரும் இனமுழக்கம்!
அரசியல் கூட்டணியில் அடிக்கடி அணியை மாற்றி - அவர்
ஆதாயம் காண்பதாக அலறுகின்ற அற்பமே
அணிமாறும் நிலை எடுக்கும் எங்கள் அய்யா என்றேனும்
கொள்கை மாரியதாய்க் கூறமுடியுமா உன்னால்?
மருத்துவர் அய்யாவின் மகத்தான தலைமை ஏற்று
மாபெரும் மக்கள் கூட்டம் மடைதிறந்து பின் தொடர - அதை
வழிநடத்திக் கொண்டு சென்று வாழ்வுரிமை பெறுகின்ற
போராட்ட நெடும்பயனை நுட்பங்களே அணிமாற்றம்.
நுரைமுருகனுக்கெல்லாம் இந்த நுட்பங்கள் தெரியாது!
ஆற்று மணலையெல்லாம் அள்ளிக் கொண்டு போங்கள் என்று
அணி மாறிய எங்கள் அய்யா அறிக்கைகள் விட்டாரா?
கல்விக்கட்டணத்தில் இனிமேல் கொள்ளையடிக்கலாம் என்று
கூட்டணி மாறியதால் கூட்டத்தில் பேசினாரா?
இடஒதுக்கீடு உரிமை எங்களுக்கு வேண்டாம் என்று
எந்தக் கூட்டணியில் சேர்ந்து எங்கள் அய்யா உனக்கு சொன்னார்.
வாழமுடியாமல் சாகும் வேளான்குடி மக்களின்
வாழ்வுரிமைகளுக்கு இனிமேல் வாய்திறக்க மாட்டேன் என்று
அணிமாறிய எங்கள் அய்யா அறிவிப்பு செய்தாரா?
ஏழை உழவர்களுக்கு இருக்கின்ற விளைநிலத்தை
வளைத்து வளைத்து இனிமேல் வாங்கிப் போடுங்கள் என்று
நீ செய்யும் இரண்டகத்தை எங்கள் அய்யா செய்கின்றாரா?
அணிமாறிய உடனே ஆட்களை கூட்டிக் கொண்டு
வீட்டையெல்லாம் இடித்து விமானத்தை இறக்குவதற்கு
புல்டோசரை ஓட்டிக்கொண்டு போனாரா எங்கள் அய்யா?
குடிமக்களே தமிழ்க் குடிமக்களே நீங்கள்
குடித்துக் குடித்துக் குட்டி சுவராய் போங்களென்று
கூட்டணிக் கட்சியின் கொள்கையைக் கூறினாரா எங்கள் அய்யா?
ஆளும் கூட்டணியில் அணிசேர்ந்த காரணத்தால்
அரசே.... அரசே ஆளுகின்ற தமிழரசே
சாராய உற்பத்தி சுணங்கிப் போய்க் கிடக்கிறது
ஆலைகளை திறந்து அழகழகா மது வடித்து
அனைவருக்கும் கொடு என்று ஆர்ப்பாட்டம் செய்தாரா?
முதல்வர் குடும்பத்தின் முத்தான காவியம்
எந்திரன் வெளிவந்து இத்தனை நாள் ஆகிறதே
இளைஞர்களே நீங்கள் அதை இன்னுமா பார்க்கவில்லை?
என்று எங்களையெல்லாம் இருட்டிலே தள்ளினாரா?
அணிமாறிப் போய்விட்ட அவசியத்தின் பொருட்டு
ஆற்காட்ட்சு சாமிகள் ஆனந்தப்படும் படியாய்
தமிழ் ஓசை நாளேட்டைத் தெலுங்கிலே நடத்தினாரா?
அணிமாறி விட்டதனால் அறம் மாறிச் செயல்பட்டு
மக்கள் தொலைக்காட்சியிலே மானாட விட்டாரா?
மயிலாடப் பார்த்தாரா? - இல்லை
குதர்க்கப் பொருள் கொண்ட குத்துப் பாட்டுக்கெல்லாம்
குழந்தைகளைக் கூட கூத்தாட விட்டாரா?
உன்னோடு கூட்டணியில் ஒன்றாய் இருந்த போதே
ஊருக்கு உலைவைக்கும் உங்களதுத் திட்டங்களை
உடனுகுடன் தகர்த்த வீரியம் எங்கள் அய்யா!
தேவையைக் கருதிச் சேரும் தேர்தல் உடன்பாட்டில்
அடங்கிப் போவார் என்று அய்யாவை நினைக்காதே!
அடக்கப் பிறந்த அவர் அடங்கிப் போக மாட்டார்!
கட்சி அரசியல் கலாச்சாரக் கூட்டத்தில்
கொள்கை அரசியலின் கோட்பாடு எங்கள் அய்யா!
கோடானுகோடுப் பாட்டாளிச் சொந்தங்களின்
நாடி நரம்புகளில் நீக்கமற நிறைத்து நின்று
சமூகநீதி கேட்ட்கும் சஞ்சீவிராயர் மகன்!
ஒரே ஒரு மனிதராய்ப் பயணத்தைத் தொடங்கி
இரண்டு கோடித் தமிழர்களின் இயக்கமாய் மாறியவர்!
அரசியலுக்கு அப்பால் அனைத்துத் தமிழர்களுக்கும்
பெரியாருக்குப் பிறகுவந்த பெரியார் இவர் என்கிறார்கள்!
அய்யா என்கின்ற மையப்புள்ளியே- நம்
அனைவருக்குமான அடையாளமானது!
இரண்டு கோடி மக்கள் இருக்கின்ற சொந்தத்தில்
அய்யாவுக்கு முன்பென்ற அடையாளம் எவருமில்லை!
போற்றுதலுக்குரிய பொது அடையாளம்
இனமிருக்கும் வரைக்கு இருக்கப் போகும் அடையாளம்!
அய்யா சிந்திய வியர்வைத் துளிகளே
ஆயிரக்கணக்கிலே சங்கமாய்த் திரண்டது!
அய்யா என்கிற ஒற்றை நரம்புதான்
உதிரிமணிகளை ஒன்றாக கோத்தது!.
ஆசுவாசப் படுத்தியே அழிக்கின்ற அரசியலில் - நம்மை
ஆவேசம் பெற செய்த அருமைப் பெருந்தலைவர்!
அனைத்துச் சமூகங்களும் அதனதன் உரிமைப் பெற
அடித்தளமாய்ச் சிந்திக்கும் அரசியல் விஞ்ஞானி!
ஓட்டுக்கு துட்டு தரும் உங்களது அரசியலில்
வேட்டுக்கு உயிர்கொடுத்து வரலாற்றைத் தொடங்கியவர்!
பட்டாசு ஓசைக்குப் பழக்கப்பட்ட தலைவர்களைத்
துப்பாக்கி ஓசையால் திரும்பிப் பார்க்க வைத்தார்!
இரண்டகம் ஏளனம் எல்லாம்
எங்களைக் கடந்து போகும்!
எல்லாமும் இழந்து நிற்கும் எங்களது ஏழையினம்
யாவும் பெறுகின்ற இனியநாள் நாளை வரும்!
நாளை நமதாகும் நல்லதோர் விடியல் வரும் - எங்கள்
நவநீதம்மாள் பேரன் நாடாளும் காலம் வரும்!
அன்புடன்,
No comments:
Post a Comment