நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, November 29, 2010

பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி

Post 
லண்டன்: பீடி, சிகரெட்டை தொடாதவரா நீங்க... மற்றவர்களாலும் உங்களுக்கு புகை பகையாகி, மரணம் நெருங்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆண்டுதோறும் இதுபோல 6 லட்சம் அப்பாவிகள் காரணமே தெரியாமல் பரிதாபமாக பலியாவதாக சொல்கிறது புள்ளி விவரம்.இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் சுவீடன் தேசிய சுகாதார வாரியம் மற்றும் ப்ளூம்பெர்க் அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. புகை பிடிக்காமல், ஆனால் புகைப்பவர்களால் நோய்க்கு ஆளாகி இறப்பவர்கள் பற்றிய கணக்கெடுப்பில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கினர். அவர்கள் வெளியிட்ட புள்ளி விவரத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வருமாறு:உலகம் முழுவதும் புகை பிடிப்பவர்களால் அதை சுவாசிப்பதனால் மட்டுமே புகையிலை தொடர்பான நோய்களுக்கு ஆளாகி ஆண்டுக்கு 6 லட்சம் பேர் பலியாகின்றனர். அவர்களில் 1.65 லட்சம் பேர் குழந்தைகள். மற்றவர்கள் வெளிவிடும் புகையை சுவாசிப்பதால் 3.79 லட்சம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். அவர்களில் 2.81 லட்சம் பேர் பெண்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு 1.65 லட்சம் குழந்தைகள் பலியாகின்றன. ஆஸ்துமாவால் 36,900 பேரும், நுரையீரல் புற்றுநோய்க்கு 21,400 பேரும் உயிரிழக்கின்றனர்.

இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் 1 சதவீதம். புகைபிடிக்கும் தந்தை அல்லது தாயால் மட்டுமே குழந்தைகள் அதிகளவில் இறக்கின்றனர்.புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களில் ஆண்டுதோறும் 51 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கின்றனர். இதில் குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபம். தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்க நாடுகளில்தான் குழந்தை எதிரிலேயே புகை பிடிக்கும் பெற்றோர் அதிகம். தந்தை அல்லது தாய் வெளியிடும் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் எளிதில் பரவுகின்றன.புகைபிடிக்கும் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் திடீர் மரணம் அடையும் ஆபத்து அதிகம். காது தொற்றுநோய்கள், சுவாச பாதிப்பு, ஆஸ்துமா ஆகியவை ஏற்படும். புகை பிடிப்பவர்களின் குழந்தையின் நுரையீரல், மற்ற குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சியைவிட குறைவாக இருக்கும். இவ்வாறு புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பழி ஓரிடம், பாவம் வேறிடம்

புகையிலையால் தற்போது உலகளவில் 51 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். கட்டுப்படுத்தாவிட்டால், 2030ம் ஆண்டில் 80 லட்சமாக அதிகரிக்கும்.
உலகளவில் புகைக்கு அடிமையான 100 கோடிக்கும் அதிகமானவர்களில் 80% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வசிக்கின்றனர்.
புகையிலை புகையில் 4,000 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் 250 கொடியவை. 50க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் புற்று நோய் உண்டாக்க கூடியவை.
புகை பிடிக்காமல், ஆனால் புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


இந்தியாவில்...

இந்தியாவில் 57 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும் புகையிலை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக மக்களவையில் அளித்த எழுத்துமூலமான பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் தினேஷ் திரிவேதி, ‘நாட்டில் 15&49 வயதுக்கு உட்பட்டவர்களில் 32 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும் சிகரெட் அல்லது பீடி புகைக்கின்றனர். அதிகபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 60.8 சதவீத பெண்களும், 83 சதவீத ஆண்களும், குறைந்தபட்சமாக இமாசலப் பிரதேசத்தில் 1.2 சதவீத பெண்களும், 40 சதவீத ஆண்களும் புகையிலை பயன்படுத்துகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். இந்திய ஆண்களில் புகையிலை மெல்லுவது மற்றும் புகைப்பது 50 சதவீத அனைத்து புற்றுநோய்களுக்கும் காரணங்களாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது

No comments: