ஒரு நாட்டில் ஓர் இனத்தின் வரலாற்றுப்பாதைகளைப் புரட்டினால் அதில் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதினை எவராலும் மறுக்க முடியாது. அதுவும் இலங்கைத் தீவில் தமிழினத்தின் வரலாறுகள், துன்பங்கள், துயரங்கள் நிறைந்திருந்தாலும் வீரஞ்செறி ந்த நிகழ்வுகளும் ஏராளம் நடந்தேறியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இராவணனின் வரலாறு, அதன் பின்பு அனுராதபுரத்தில் நீதி தவறாமல் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்த எல்லாளன் வரலாறு.
யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலியனின் வரலாறு, வன்னியை ஆண்ட மாவீரன் பண்டார வன்னியன் வரலாறு என்பன உயர்ந்தவை. இவர்களின் வரலாற்றை மீட்டுப் பார்த்தால் அதில் பல புனிதத் தன் மைகள் புலப் படுகின்றன. நாம் பண் டார வன்னி யனின் வர லாற்றினை அவரது நினைவு நாளில் நிலை நிறுத்திக் கொள்வோம்.
இலங்கையில் புராதன காலத்தில் காணப்பட்ட இராச்சியங்களில் அடங்காப்பற்று எனப்படும் வன்னிராச்சிய வரலாறுகள் வித்தியாசமானவை. இலங்கையில் வடபகுதியின் வடக்கே ஆனையிறவு பரவைக் கடலையும் கிழக்கே முல்லைத்தீவுக் கடலையும், தெற்கே நுவரகலாவிய மாவட்டத்தையும் மேற்கே மன்னார் கடலையும் எல்லைகளாகக் கொண்ட பிரதேசமே அடங்காப்பற்று எனப்படும் வன்னி ஆகும்.
இந்த வன்னிப் பிரதேசத்தில் ஆதிகாலத்தில் வேடர்களும் இராவணன் பரம்பரையைச் சேர்ந்த தமிழர்களும் வாழ்ந்ததற்கான தொல்லியல் வரலாறுகளும் வரலாற்றுச் சின்னங்களும் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகள் சுதந்திரமாக இருந்தனர். புவியியல் அமைப்பு, சூழல், சமூக வாழ்க்கை முறை காரணமாக அவர்கள் யாருக்கும் அடி பணியாமல் இருந்தனர். யாழ்ப்பாண ஆட்சியினருக்கோ, சிங்கள ஆட்சியினருக்கோ அடங்காமல் இருந்த பிரதேசம் என்பதால் இப்பகுதி “அடங்காப்பற்று” எனப் பெயர் பெற்றது.
இவ்வாறு சிறப்புப் பெற்ற அடங்காப்பற்று எனப்படும் வன்னி இராயச்சியத்தை ஆரம்பத்தில் ஆண்ட வன்னியர்கள் பனங்காமத்தை தமது தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். பின்பு முல்லைத்தீவைப் பிரதான இடமாக மாற்றினர். இந்த வன்னி இராச்சியத்தை இரண்டு வகையானவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகின்றது. வன்னியர்கள் எனப்படுவோரும் மற்றும் மாப்பாணர்களும் ஆட்சி புரிந்தனர்.
இவ்வாறான சூழ்நிலைகளில் கி.பி. 1505ஆம் ஆண்டு இலங்கைக்குள் நுழைந்த போர்த்துக்கேய இனத்தவர்களால் வன்னியின் செட்டிக்குளம், மன்னார் போன்ற பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் பின்பு கி.பி. 1782ஆம் ஆண்டு ஜூலை மாதம் லெப்ரினென் நாகெல பொது மன்னிப்பளித்தபோது சின்னநாச்சி என்பவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. முல்லைத்தீவிற்கு திரும்பிச் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறான சூழ்நிலைகளில் பண்டாரவன்னியனின் தாயின் பெயர் சின்னநாச்சியாக இருந்திருக்கலாம். சுவாமி ஞானப்பிரகாசரின் பரம்பரைக் குறிப்பின்படி குழந்தை நாச்சனுடைய மகன் பண்டாரவன்னியன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் பண்டாரவன்னியனின் ஆள்புலம் முல்லைத்தீவு வட்டுவாகல், முள்ளியவளை, ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களாக இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கி.பி. 1796ஆம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்கள் கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியங்களை இலகுவாக கைப்பற்றிக் கொண்டனர். ஆயினும் கி.பி. 1800ஆம் ஆண்டு பனங்காமத்தில் படைப்பிரிவு ஒன்று இருந்த தாகக் குறிப்பி டப்படுகின்றது. பண்டாரவன்னியன் வன்னியில் கலகங்கள் செய்ததன் காரணமாக ஒல்லாந்தரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் ஆங்கிலேயர்களின் மன்னிப்பின்பேரில் வன்னியில் ஒரு சிறு பிரிவிற்கு தலைவனாக நியமிக்கப்பட்டான். ஆனால் பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களைத் தனது நாட்டிலிருந்து வெளியேற்றப் போவதாகச் சபதம் செய்து மீண்டும் கலகங்கள் செய்ய ஆரம்பித்தான்.
பண்டாரவன்னியன் பாரிய படையெடுப்பினை மேற்கொண்டு வடபகுதி வன்னி முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்ததுடன் முல்லைத்தீவையும் கைப்பற்றினான். மேலும் அவனது படையினர் கொட்டியாரத்தையும் கைப்பற்றினர். பண்டாரவன்னியன் அங்கும் சில தனது படை வீரர்களை நிலைகொள்ளச் செய்தான். ஆயினும் குறுகிய காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் மீளவும் இதனைக் கைப்பறியதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலைகளில் பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டு கற்சிலை மடுவில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனை நன்கு அறிந்த ஆங்கிலேயத் தளபதி கப்டன் டிறிபேர்க்கின் தலைமையிலான ஆங்கிலப் படைகள் கி.பி. 1803ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரில் இருந்து கற்சிலைமடுவுக்கு வந்து கடுமையான தாக்குதல்களைக் தொடுத்தன. சற்றும் எதிர்பாராத பண்டாரவன்னியனும் அவன் சார்ந்த படைகளும் இதனால் அதிர்ச்சியடைந்தன. இச்சண்டையிலே பண்டாரவன்னியன் தனது இரு கரங்களிலும் வாளேந்திக் கடுமையாகப் போரிட்டாலும் அவன் கற்சிலைமடுவில் வீரமரணடைந்தான்.
பண்டாரவன்னியனை போரிலே தோற்கடித்தமைக்கு கப்டன் டிறிபேர்க்கிற்கு பண்டாரக்குளம் பரிசாக வழங்கப்பட்டது. பண்டாரவன்னியன் இம்மண்ணிலே மரணித்தாலும் ஒவ்வொரு தமிழர்களது மனங்களிலும் அவன் ஓர் வீரனாக வாழ்ந்து வருகின்றான் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. எனவே இந்நாளில் அவரைப் போற்றி நினைவுகூருவோம்.
No comments:
Post a Comment