தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள வன்னியர் சமூகத்தின் உரிமைகளுக்கான-வன்னியர் நலச்சங்கமாக பாமக முதலில் உருவானது. 'டாக்டர்' பணி செய்துவரும் இராமதாசு வன்னியர் நலச்சங்கத்தை தலைமையேற்று நடத்திவந்தார். வன்னியர் சமூகத்துக்காக தனி இடஒதுக்கிடு கோரி 1989-ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிப்பு செய்தது வன்னியர் நலச்சங்கம். பின் 1990-ன் மத்தியில் "பாட்டாளி மக்கள் கட்சி" என்ற பெயரில் டாக்டர் இராமதாசை நிறுவனராகவும், பேராசிரியர் தீரனை தலைவராகவும் கொண்டு புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது
1989-1991-ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக, வன்னியர்கள் உள்ளிட்ட சில 'சாதிகளை' தொகுத்து மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலாக வெளியிட்டது. இந்தியாவிடமிருந்து தமிழ்நாட்டுக்குத் தன்னுரிமை (Self-determinational), தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆதரவு, உள்ளிட்டவைகளுக்காக பாமக குரல் கொடுத்து வருகிறது.
1996ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 4 இடங்களில் வென்றது பாமக. 1998-ம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாரதீய ஜனதா, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கடுமையான விமர்சனங்களுக்கு இடையில் கூட்டணி அமைத்தது. 4 மக்களவை தொகுதிகளைக் கைபற்றிய பாமக, இந்தியாவின் கூட்டணி அரசான பாரதீய ஜனதா தலைமையிலான அமைச்சரவைக்கு முழு ஆதரவளித்தது. பாமகவின் பொதுச்செயலரான தலித் எழில்மலை இந்திய அமைச்சரானார்.
பாமகவின் நிறுவனராக டாக்டர் இராமதாஸ்; தலைவராக ஜி.கே. மணி (பேரவை உறுப்பினர்) ஆகியோர் உள்ளனர். பாமக தொடங்கிய போது முக்கிய பொறுப்புகளில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாமகவின் தலைவராகச் செயல்பட்ட தீரன் (பேரவை உறுப்பினர்) ஆகியோர் பாமகவிலிருந்து விலகிவிட்டனர். கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடாக "தினப் புரட்சி" நாளேடும், "மக்கள் முரசு"ம் சிறிது காலம் வெளிவந்தன. பாமகவின் தேர்தல் சின்னம் யானை.
1999 ஆம் ஆண்டு தி.மு.க.வுடன் இணைந்து நாடாளுமன்ற இடைத்தேர்தலை பா.ம.க சந்தித்தது. மத்திய அரசிலும் இரண்டு அமைச்சர்கள் அங்கம் வகித்தனர். பின்னர் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுடனான முரண்பாடை அடுத்து அந்தக் கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க. அணியில் இணைந்தது. 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்ததால் இந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கையுடன் வேறுபாடுள்ள காங்கிரசு, தமிழ்மாநில காங்கிரசு கட்சிகள் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமைப்பதில் தயக்கம் காட்டின. இறுதியில் தமிழ்நாட்டில் பா.ம.க, அ.தி.மு.க, காங்கிரசு கட்சிகள் ஓரணியிலும் புதுவையில் பா.ம.க, அ.தி.மு.க. ஓரணியிலும் போட்டியிட்டன. புதுவையில் அ.தி.மு.க, பா.ம.க.வுக்கு எதிராக காங்கிரசு கட்சிகள் மூன்றாவது அணியை உருவாக்கின.
No comments:
Post a Comment