நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, November 17, 2010

பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும்....



             பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும் என்று ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.  பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட புதிய பிரசார உத்திகளை அடிப்படையாகக் கொண்டு, பாமக தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மைக்ரோ பிளானிங் முகாமினை நடத்தி வருகிறது.

            இதன்படி ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் ஆக. 23-ம் தேதி முதல் நடைபெற்று வரும் மைக்ரோ பிளானிங் முகாமில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பங்கேற்றுள்ளனர். மைக்ரோ பிளானிங் முகாமின் முக்கிய நிகழ்ச்சியாக பாமகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணியினருக்கான அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தீவட்டிப்பட்டியில் அரசியல் பயிலரங்க பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். 

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசியது:  

             தமிழகத்தில் உள்ள நாற்பது சதவீத இளைஞர்களில் பெரும்பாலானோர் 15 வயதிலேயே மது குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பின்னர் அப்பழக்கத்திற்கு அடிமையாகி விடும் இளைஞர்களால் கிராம பகுதிகளில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு  ரூ.2 ஆயிரத்து 400 முதல்  ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தவிக்கின்றன. இதுமட்டுமன்றி அளவுக்கு அதிகமான குடிப் பழக்கத்தினால் 25 வயதிலேயே ஏராளமான இளைஞர்கள் போதிய உடல் நலமின்றி உயிரிழக்க நேரிடுகிறது. 

             இது போன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பாமக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.÷இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாயிலாக அரசியல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது. மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினால் விவசாயப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்படுவதை பாமக எதிர்க்கவில்லை. 

           ஆனால் நன்கு விளைச்சல் தரும் விவசாய நிலங்களை விட்டுவிட்டு, தரிசு நிலங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் வறட்சி பாதித்த மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்க வேண்டும். இதன் மூலம் விளை நிலங்கள் காப்பாற்றப்படும் என்பதோடு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றார் முன்னாள் அமைச்சர் அன்புமணி.  

அரசியல் பயிலரங்கினை தொடங்கி வைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:  

               தமிழகத்தில் உள்ள இரண்டரைக் கோடி வன்னியர்களும் பாமகவிற்கு ஓட்டு போட்டால் பாமக ஆட்சியைப் பிடிக்கும். உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதிக்கும், பீகாரில் லல்லு பிரசாத் யாதவிற்கும் அவரவர் சார்ந்த சமுதாயத்தினர் தங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவினை தருகிறார்கள். இதைப் போன்ற ஆதரவினை வன்னிய சமுதாயத்தினர் வழங்கினால் தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்கினால் அதற்கேற்ப அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க முதலமைச்சர் கருணாநிதி பயப்படுகிறார். 

             ஆனால் பாண்டிச்சேரி மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாமகவைத் தவிர உயரிய கொள்கைகள் வேறெந்த கட்சியில் இருந்தாலும் அதில் இணைய தயார் என்று அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை யாரும் அதற்கான கொள்கைகள் தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கவில்லை.  

            தமிழகத்தில் வேறெந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் பாமகவில் தான் அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனர். மாநில அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஆறு லட்சம் இளைஞர்களுக்கு பாமக சார்பில் அரசியல் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடைய கிராமங்களில் பாமக கொள்கை மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

                ஒவ்வொரு இளைஞரும் தலா 100 ஓட்டுகளை பாமகவிற்கு பெற்றுத்தரும் வகையில் செயலாற்ற வேண்டும். கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி பெண்கள் தான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர். பெண்களுக்கு பலனளிக்கும் வகையிலான பல்வேறு சமூக பணிகளை பாமக செய்து வருகிறது. சமூகத்தில் பெரும்பான்மை ஓட்டு வங்கியான பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும். அதற்கு இளம்பெண்கள் அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.   முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தமிழரசு, வை.காவேரி, பெ.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: