தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் முன்னணி வகிக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தெரிவித்தார்.
திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா புதன்கிழமை தொடங்கி வைத்து பேசியது:
அனைத்துத் தரப்பினரையும் கல்வி சென்றடைய வேண்டும். மனித முன்னேற்றத்துக்கு கல்வி மிக அவசியம். உயர் கல்வியானது தனிமனிதனை மேம்படுத்துவதோடு, சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய அளவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தத் துறையில் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் தொழிற்சாலைகளையும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும், கல்வி நிறுவனங்களையும் அந்தப் பகுதிகளில் உருவாக்க வேண்டும். இதன்மூலம் கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க இது உதவும்.
நமது நாட்டில் இருந்த மத்திய அமைச்சர்களில் மது மற்றும் புகையிலை ஒழிப்புக்கு பெரிதும் பாடுபட்ட ஒரே அமைச்சர் அன்புமணி ராமதாஸ்தான். அதேபோல் ரயில்வேதுறை இணை அமைச்சராக இருந்த வேலு, பஞ்சாப் மாநிலத்தில் நிறைய ரயில் திட்டங்களை நிறைவேற்றினார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் முக்கியக் காரணம் ராமதாஸ் எனது தனிப்பட்ட நண்பர் என்பதால்தான் என்றார் பர்னாலா.
வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் பேசியது:
பணக்காரர்களுக்கு கிடைக்கிற கல்வி ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பது தான் எனது லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்பது எனது ஆசை என்றார் ராமதாஸ்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் மு.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.க்கள் இரா.அன்பரசு, கோ.பூவராகவன்,முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சர் இரா.வேலு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் து.விசுவநாதன், தொழிலதிபர் எஸ்.அருணாசலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வன்னியர் கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் ஆ.அரிநாராயணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment