சில மாதங்களுக்கு முன் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மது என நினைத்து விஷச் சாராயத்தைக் குடித்த இரண்டு மாணவர்கள் இறந்த போனதாக பத்திரிகையில் செய்தி வந்தது. இதற்குப் பிறகு குமரி மாவட்டத்தில் ஒரு பனைத் தொழிலாளி எரிசாராயம் குடித்து இறந்து போனதாக செய்தி படிக்க நேரிட்டது. இந்த இரு செய்திகளும் தமிழ்கூறும் நல்லுலகில் எந்த அதிர்வையும் உருவாக்கவில்லை. ஏனெனில் செத்துப் போனவர்கள் யாரும் முக்கிய பிரமுகர்களோ… அரசியல்வாதிகளோ அல்ல; சமாணியர்கள். இவர்கள் இருந்தாலென்ன… இறந்தாலென்ன…. சென்ற ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கொத்தக் கொத்தாக உழைக்கும் மக்கள் மடிந்தபோதே சிறிய சலசலப்போடு அது அழிக்கப்பட்டது.
மேற்கண்ட செய்திகளைப் படிக்க நேடிட்ட இதே காலகட்டத்தில்தான் தமிழக அரசின் வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அரசின் நிதிச் செயலர் 2009-10ஆம் ஆண்டில் மது விற்பனை மூலம் வரி வருமானம் ரூ12ஆயிரம் கோடி இருக்கும்  என்றும், கடந்த நிதியாண்டில் இது பத்தாயிரம் கோடியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்த செய்தியையும் படிக்க நேரிட்டது. தமிழக மக்கள்தொகையில் ஏறக்குறைய ஒரு கோடிக் குடும்பங்கள் குடிகாரர்களைக் கொண்டுள்ளது என்பதை விடவும் அவலமாக நிலை இதையன்றி வேறொன்றுமில்லை. ஒரு குடும்பம் ஆண்டொன்றுக்கு சராசரியாக மதுவுக்காக மட்டும் 12ஆயிரம் செலவிடுகிறது. இது நான் சொல்லும் தகவலல்ல; அரசாங்கத்தின் கணக்குதான். நமது அரசாங்கம் ஆண்டு முழுதும் தனது மக்களுக்காக வாரி வாரி வழங்குவதாகச் சொல்லும் நலத் திட்டங்களுக்காக செலவிடும் தொகையே வெறும் 5551 கோடிதான். அழகான முகத்திலிருக்கும் சதையை எடுத்து முதுகில் ஒட்டவைக்கும் செயலுக்கும் இதற்கும் எந்தவொரு வேறுபாடுமில்லை. ஒரு லிட்டர் சாராவி (ஆல்கஹால்) விலை ரூ.36. இதில் இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றினால் 3 லிட்டர் சாராயம் அகிவிடும். அப்படியென்றால் ஒரு லிட்டர் சாராயத்தின் அடக்கவிலை ரூ.12 தான். மதுக்கடைகளில் 750 மில்லி லிட்டர் பாட்டில்தான் விற்கப்படுகிறது. 3 லிட்டருக்கு 4 பாட்டில்கள் சாராயம் உற்பத்தி செய்யலாம். 750 மில்லி லிட்டர் பாட்டிலில் உள்ள சாராயத்தின் அடக்க விலை ரூ.9 தான்.( குடிமக்கள் முரசு பிப்ரவரி2009) அளவுக்கு அதிகமான லாபம் வைத்து ஒரு பொருளை அரசாங்கமே விற்பனை செய்யும்போது மற்ற வியாபார நிறுவனங்கள் இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருப்பதை எப்படி இவர்களால் தடுக்க முடியும்?
ஒரு அரசாங்கமே தெருவுக்குத் தெரு கடைபோட்டு உட்கார்ந்து கொண்டு தனது பிரஜைகளுக்கெல்லாம் ஊத்திக்கொடுக்கும்போது எவன் செத்தாலென்ன…. எவள் தாலியத்தாலென்ன….கஜானாவை நிரப்புவதையன்றி வேறெந்த எண்ணமுமில்லாத அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமெல்லாம் எவ்வளவு பெரிய பாக்கியவாண்கள்… மது அரசாங்க பானமாகவும், போதையில் தள்ளாடுவது ராஜ கலாச்சாரமாக்கப்பட்டுள்ளதை விவரிப்பதற்கு வார்த்தைகள் தேவையில்லை; டாஸ்மார்க் கடைகளின் வாசல் முன்பு பார்த்தாலே புலப்படும்.
மதுக்கடைகளை மூடுங்கள் என்று போராட்டம் நடத்தினால் கிண்டலும் கேலியுமாக அறிக்கை விடுகிறார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்து அதைச் செய்யுங்கள் என எகத்தாளம் பேசுகிறார்கள். மது தமிழர்களின் கலாச்சார பானம் என்று கதை சொல்வதற்கென்றே சில புளுகர்களை…… மன்னிக்கவும் புலவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பொய்யுக்கும் ஒரு சன்மானம் தரப்படுகிறது. பெரும்பொய் சொல்லும் புலவர்களின் வாரிசுகளுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. சிறும்பொய் சொல்பவர்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்சிக்கு எதிர்ப்பு தொடங்கியது.  மக்கள் போராடத் தொடங்கினார்கள். போராட்டங்களை மிகக் கடுமையான அடக்குமுறைச் சட்டங்கள் மூலமாகத் தடுத்த ஆங்கிலேயர்கள், அடுத்த தலைமுறையினருக்கு போராட்ட சிந்தனையே வரக்கூடாது என்பதற்காக கள்ளுக்கடைகளைத் திறந்தார்கள். புகையிலை பொருட்களைக் கொண்டு வந்தார்கள்.  மின்சாரமும் போக்குவரத்தும் நுழையாத கிராமங்களில்கூட புகையிலைப் பொருட்கள் நுழைந்தன.  ஆங்கிலேயர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட வெள்ளைக்காரர்களுக்கான கேளிக்கை விடுதிகளில் இந்தியர்களும் அனுமதிக்கப்பட்டனர் உடலால் இந்தியராகவும் எண்ணத்தால் வெள்ளைக்காரர்களாகவும் மாறிக்கொண்டிருந்த கழிசடைகள் அங்கு சென்று குடிப்பதும் கும்மாளமிடுவதுமாய் கிடந்த காலகட்டத்தில்தான்  மகாத்மா காந்தி வந்தார். பூரண மதுவிலக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் தேசத்தில் சுதந்திர உணர்வைத் தூண்ட முடியும் என்பதைத் தீர்க்கமாக உணர்ந்த காந்தியடிகள் கள்ளுக்கடை மறியலைத் தொடங்கினார். அன்றைக்கு இந்தப் போராட்டத்திற்கு மதுவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தனது முழு ஆதரவைத் தந்தார். தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பை வெட்டினார். தனது குடும்பத்தின் பெண்களையெல்லாம் கள்ளுக்கடை மறியலுக்கு அழைத்தச் சென்றார்.
இந்தியா விடுதலை பெற்றபோது அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பெரியவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள், 1948ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக மதுவிலக்கைக் கொண்டு வந்தார். மது விற்பனையின் மூலம் அன்றைய அரசுக்குச் கிடைத்த 80 கோடி ரூபாயை இழக்க முடிவு செய்தார். மக்களை தீய பழக்கத்திற்கு அடிமையாக்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்த ஆட்சியை நடத்தாமல் இருப்பதே மேல் என்ற எண்ணம் கொண்டவர் ஓமந்தூரார்.
அவருக்குப் பிறகு இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடந்து தமிழகத்தில் ராசாசியும், பெருந்தலைவர் காமராசரும், பெரியவர் பக்தவச்சலமும், பேரறிஞர் அண்ணாவும் அரசாட்சி செய்த போதும் மது விலக்கு அமலில்தான் இருந்தது. பல மாநிலங்களில் மது விலக்கைத் தளர்த்திய போதும் அண்ணா தன் நிலையில் மனம் தளராமல் இருந்தார். ”மது விலக்கை ரத்து செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் என் மனக்கண்ணில் தெரிவதைவிட, அதனால் பாதிக்கப்படும் தாய்மார்களும் குழந்தைகளும் அழும் காட்சியே முதலில் தெரிகிறது.  மதுவுக்கு அடிமையாகி, அறிவையிழந்து,  காட்டுமிராண்டி போல் மனிதன் திரிவதால் கிடைக்கும் வருவாய் நமக்குத் தேவையில்லை. புன்னகை பூத்த தாய்மார்களின் முகமும், குதூகலம் நிறைந்த குடும்பங்களுமே நல்லாட்சிக்கு இலக்கணம்.” என்று சொன்ன தலைவன் வாழ்ந்தபூமி இது. அந்தத் தலைவனுக்கு நூற்றாண்டு விழாவை அவன் எதிர்த்த மது வருமானத்திலேயே கொண்டாடுகிறோம். இதைவிடச் சிறிய செயலை யாரால் செய்ய முடியும்?
1948ஆம் ஆண்டு தொடங்கி 1970 வரையில் ஒரு தலைமுறையினரை மது போதையிலிருந்து காப்பாற்றி வைத்த பெருமையை 1971ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அரியணை ஏறிய முத்தமிழ்க்காவலர், ஆயிரம் பிறைகண்ட அபூர்வ மனிதர், இன்றைய முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் தனது சாமர்த்தியமான பேச்சால் தகர்த்தார் ”சுற்றி எரியும் வனத்திடையே பற்றி எரியா கற்பூரமாக தமிழ்நாடு இருக்கக் கூடுமோ…? வேசியர் நடுவே பத்தினிப் பெண்டிர் கற்புடன் வாழ்தல் இயலுமோ?” (என்ன கேவலமான உவமை) என்று சொல்லி கள்ளுக்கடைகளைத் திறந்தார். மதுவின் வாசனையையும் அதன் வகைகளையும் முன்பின் அறிந்திடாத தலைமுறையினரை மதுவுக்குப் பழக்கப்படுத்திய மாண்பு(?)க்குச் சொந்தக்காரர் நம்முடைய முதல்வர். எனது குடும்பத்தில் அப்போது கட்டிளம் காளையாக… திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாளாக இருந்த எனது சித்தப்பாவும் மதுவைத் தொட்டார். மது ராஜ திரவமல்லவா.. மது குடிக்கச் சொல்லி அரசே ஆணையிட்டு விட்டதல்லவா.. தலைவனின் கற்பூரக் கனல் வார்த்தையை மதிப்பது தானே தொண்டனுக்கு அழகு.  எங்கள் குடும்பத்தில் சாராயத்திற்கு அடிமையான முதல் மனிதர் என் சித்தப்பாதான். தி.மு.க.வின் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி பல போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்று, தன் வாழ்நாள் நெடுகிலும் தி.மு.க. கொடியையும், குடியையும் கவசமாகவே பாவித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே அவர் மடிந்து போன சோகம் இன்னும் எங்களுக்குள் இருந்து கொண்டிருக்கிறது.
அன்று தொடங்கிய மது வலம் அதற்கடுத்து இவரது பரம அரசியல் எதிரிகளின் ஆட்சியிலும்கூட ஒழிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இயல்பாகவோ.. அல்லது திட்டமிட்டு ஏற்பட்ட இந்த ஒற்றுமை இன்றுவரையில் தொடர்கிறது. எம்.ஜி. இராமச்சந்திரன் தமிழகத்தில் முதல்வராக இருந்த போது, ”பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் மதுக்கடைகள் இருக்கிறது.” என்று பத்திரிகையாளர் சபாரத்தினம் பாத்திரம் மூலம்  பாலைவன ரோஜாக்கள் படத்தில் வசனம் பேசி தனது எதிர்ப்பை பட்டும் பராமல் கலைஞர் பதிவு செய்த வரலாறும் உண்டு.செல்வி. ஜெயலலிதாவின் ஆட்சியில் தனியார் மதுக்கடைகளெல்லாம் அரசாங்க மதுக்கடைகளாக மாற்றப்பட்ட போதும் ஒர் எதிர்க் கட்சியாக இருந்து தங்களின் பலத்த எதிர்ப்பைக் காட்டத் தவறியவர்கள்தான் தற்போது மதுக்கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறார்கள். நல்ல செயல்கள் எல்லாம்  தனதாட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்று சொந்தம் கொண்டாடுகிற கலைஞர் அவர்களுக்கு தனது நடுத்தர வயதில், அறிந்தே செய்த தவறை பக்குவம் கொண்ட இந்த வயதிலாவது திருத்த வேண்டும் என்ற எண்ணம் ஏனோ இன்றும் வரவில்லை.
மாறாக ”பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தினால் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அண்டை மாநிலங்களுக்கு, முக்கியமாக புதுச்சேரிக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 6500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்” என்று தனது டப்பிங் மாஸ்டர் வீற்காடு ஆராசாமி…. மன்னிக்கவும் ஆற்காடு வீராசாமியை விட்டுப் பேட்டி தரச் செய்து கொண்டிருக்கிறார்.
குடும்ப விழாக்கள், உள்ளூர் திருவிழாக்கள், துக்கவீடுகள், தேர்தல்கள் என எல்லா இடங்களிலும் மது நீக்கமற நிறைந்திருக்கிறது. தங்கள் குடும்ப விழாக்களுக்கு தாம்பூலம் வைத்து விருந்து கொடுத்த தமிழினம் தற்போது மதுக் கோப்பைகளோடு இருப்பதைக் காணுபோது மனம் வெம்பிப் போகிறோம். சமீப காலங்களில் சுயஉதவிக்குழுக்களுக்கும் அதை வழிநடத்தும் பணியாளர்களுக்கும் பயிற்சிகள் தரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது  எங்களிடம் பயிற்சிக்காக வரும் மாணவர்களின் எழுத்துத் திறனை அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்களைப் பற்றிய விபரங்களை எழுதச் சொல்லுவோம்.  பெரும்பாலானவர்களின் விபர அறிக்கைகள் மதுபோதையில் சிக்கியுள்ள தந்தையைப் பற்றியோ, கணவனைப் பற்றியோதான் இருக்கும். திரைப்பபடங்களில், தொலைக்காட்சிகளில்  மட்டும் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற விளம்பரம் செய்து விட்டு மது உற்பத்தியை உயர்த்திக் கொண்டே செல்லும் ஆட்சியாளர்களின் எண்ணம் யாவும் லாபமன்றி வேறொன்னுமில்லை.
தன்னுடைய பிரஜைகளுக்குச் சாராயம் ஊத்திக் கொடுத்த வகையில் தனக்குக் கிடைத்த லாபம் ஓராண்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் என்று அரசாங்கம் சிறிதும் வெட்கமில்லாமல் கணக்குக் காட்டுகிறது. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொல்லிக்கொண்டு, அரசாங்கமே ஊத்திக்கொடுத்துக் கொண்டிருக்கும் இழிவான செயலைக் கண்டிக்காமல் மதுபோதையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எந்தளவுக்குச் சாத்தியமானது என்று தெரியவில்லை.
ஐந்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதாரநிலையத்தை நிறுவியுள்ளார்களோ இல்லையோ… ஒரு டாஸ்மார்க் கடையைத் திறக்க மறக்கவில்லை. டாஸ்மார்க் கடைகளில் நவீன(?)மான முறையில் பார்கள் நடத்தப்படுவதாகவும் இதன் தரம் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர்த்தப்படும் என்றும் சட்ட மன்றத்தில் சொல்லியுள்ளார்கள். டாஸ்மார்க் கடைகளில் உள்ள பார்களின் ஒப்பந்ததாரர்களாக இருப்பவர்கள் கழக உடன்பிறப்புகள்தான். (தனக்காக கொடிதூக்கியவனின் குடுப்பத்தை அழிப்பதில் கூட இவர்கள் மற்றவர்களுக்கு முன்னோடிகள்தான்.)டாஸ்மார்க் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் 80 விழுக்காட்டினர் பட்டதாரிகள். படித்துவிட்டு வேலையில்லாத ஒரு தலைமுறையை சாராயம் ஊத்திக் கொடுக்கவைத்ததோடில்லாமல் அவர்களையும் குடிகாரர்களாக்கி விட்டார்கள்
கடந்த மூன்று மாதங்களாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற திட்டத்தையும் நம்முடைய அரசு முன் வைத்துக் கொண்டிருக்கிறது. தங்களின் ஊடகங்களின் வழியாக இதற்கு மிகப் பெரிய விளம்பரமும் செய்து கொண்டிருக்கிறது.
அமைப்புசாராத் தொழிலாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்ற வந்தது இந்தத் திட்டம் என்று வழக்கம் போலவே தனது தொண்டரடிப்பொடியாழ்வார்களின் வாய்மூலம் வாழ்த்துகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் என்ற தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் பயனடைய  51  வகையான நோய்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் மது மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகி, இதனால் நோய்வாய்பட்டவர்கள் நிவாரணம்கோர முடியாது.
என்ன முரண்பாடு இது? எந்த மதுவை ஊற்றிக்கொடுத்து அதன்மூலம் பணம் சம்பாதித்து அதில் வரும் வருமானத்தில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்களோ…. அந்த மதுவால் ஏற்படும் நோய்களுக்கான மருத்துவ உதவி மட்டும் மறுக்கப்படுமாம்.
”மதுப்பழக்கம் மூலமே பல நோய்கள் உருவாகிறது. மது உடல் நலத்திற்குத் தீங்கு தரும் பானம் எனவே மது பழக்கத்தைக் கைவிடுங்கள்” என்று மருத்துவத் துறை கூறுகிறது. ”மது பழக்கத்தால் குடும்பத்தின் வருமானம் விரையமாகிறது. மதுப் பழக்கம் வரவுக்கு மீறிய செலவுகளை உருவாக்குகிறது. ஒரு குடும்பம் தனது வரவுக்குள் தன்னிறைவு பெற வேண்டுமெனில் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்பட வேண்டும். மதுபோதைக்கான செலவு இதில் முன்னணியில் உள்ளது. எனவே மதுவைத் தவிர்ப்பீர்” என்று பொருளாதாரத் துறை பரிந்துரைக்கிறது. ”நாட்டில் பல தவறுகளுக்கு மதுவே தூண்டுகோலாய் இருக்கிறது. மதுபோதைக்கு ஆட்பட்ட மனிதன் தனது சுயத்தை இழந்து விடுகிறான். தவறான பாதையில் செல்கிறான். சமூக சீர்கேடுகளைச் செய்கிறான். கலாச்சாரத்தைச் சீரழிக்கிறான். எனவே மதுவை மனிதன் மறக்கவேண்டும்.” என்று கலாச்சாரத் துறை அறிவுரை சொல்கிறது. நமது முதல்வரும் தனது 86வது பிறந்த நாளை சட்டமன்றத்தில் கொண்டாடும்போது உடல் ஆரோக்கியமாக இருப்பதன் மூலமே  ஒரு மனிதன் சிறப்பாக சமூகப் பணிசெய்ய முடியும் என்று சொல்லியுள்ளார். இது உண்மையிலேயே சத்திய வாக்குதான். இந்த வாக்கின் வழி நின்று இன்றைய இளைய தலைமுறையை நல்ல வழியில் நடத்த வேண்டிய பொறுப்பை அரசே ஏற்கவேண்டும்.
எனவே ஆட்சியாளர்களே…. நீங்கள் நூறாண்டு காலம்கூட ராஜாங்கள் செய்துவிட்டுப் போங்கள். உங்களின் கொள்ளுப்பேரன்கள் கூட எங்களை ஆண்டு தொலைக்கட்டும். எங்கள் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள். திருவிழா, கல்யாணம் காதுகுத்து என எங்கள் வீட்டு விழாக்கள் எல்லாம் பாழாய் போன குடிப்பழக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறது. உங்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தல்களில் எல்லாம் புதிய குடிகாரர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள். தயவு செய்து எங்கள் குடும்பங்களை மதுபோதைக்கு அடிமையாக்கும் செயலை இன்றோடு நிறுத்தங்கள்.  நாங்கள் எங்கள் குடும்பத்தோடு உட்கார்ந்து சந்தோசமாக பேச முடியவில்லை. திரைப்படங்களில், தெலைக்காட்சிகளில் வரும் சண்டைக்காட்சிகளையெல்லாம் பார்த்து ரசிக்கின்ற எங்கள் குழந்தைகளால் குடித்துவிட்டு வரும் அப்பாக்கள் அம்மாக்களோடு போடும் சண்டையை மட்டும் ரசிக்க முடியவில்லை. ”நானும் பெரியவனாகி அப்பா மாதிரியே குடிப்பேன்” என்று  ஒரு பள்ளியில் மாணவன் சொன்னதாக ஓர் ஆசிரியர் வேதனைப்பட்டார். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றதைக் கொண்டாடவும், தோல்வியை மறக்கவும் மது விருந்தில் ஈடுபட்ட சம்பவமும் நிறைய உண்டு. இது கதையல்ல;  உண்மை.  உண்மை எப்போதும் கசக்கும்.ஆயினும் அதுவே சிறந்த மருந்து.
மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற ஞானம் எந்த போதிமரத்தடியிலிருந்து பிறந்தாலும் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஒரு வேளை உங்களுக்கு ஞானமே வராமல் போய்விட்டால் நாங்கள் எங்களுக்கான பாடத்தைப் புகட்டுவோம். ஞானமா… பாடமா… நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
(டிசம்பர் பசுமைத்தாயகம் இதழில் வெளியான கட்டுரை)