கட்டை வண்டி பின்னே இழுக்க…  கம்யூட்டர் முன்னே இழுக்க… இரண்டுக்கும் இடையில் ரப்பராய் தேய்ந்து கொண்டிருக்கிறான் உழவன். ஒரு காலத்தில் ஊருக்கெல்லாம் படியளந்த கரங்கள் இன்று ரேசன் கடையில் கிடைக்கும் அரிசியைச் சிந்தாமல்  சிதறாமல் வாங்குவதில் கவனமாக உள்ளது. நம்முடைய விவசாயிகள் உர விளம்பரங்களிலும், அரசின் சாதனை விளம்பரங்களிலும் மட்டுமே சிரிக்கிறார்கள். உழும் குலத்தில் பிறந்தவர்களே உலகாளப் பிறந்தவர்கள் என்ற கம்பனின் கவிதையும்,போர் செய்து பெரும்படை தரும் வெற்றியை விடவும் மேலானது வைக்கோல் போர் முடித்து கண்டெடுக்கும் நெல் மணிகள் எனச் சொன்ன புறநானூற்றுக் கவிதையும், சூழலும் ஏர் பின்னது உலகம் எனச் சொன்ன வள்ளுவமும் தங்களுக்கான அர்த்தம் செத்துக்கொண்டிருப்பதைக் கண்டு மௌனமாக அழுகின்றன.
அழுதவன் கணக்குப் பார்த்தால் கண்ணீராவது மிஞ்சும். உழுதவன் கணக்கில் ஒரு மண்ணும் மிஞ்சாத காரணத்தால் உழவர்களெல்லாம் கூலி வேலைக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பெங்களூருவின் உணவு விடுதிகளிலும், திருப்பூரின் சாயத் தொழிற்சாலைகளிலும், கேரளாவின் ரப்பர் காடுகளிலும், ஆந்திராவின் முருக்குக் கடைகளிலும் தமிழகத்தின் ”யானை கட்டிப் போரடித்த வம்சம் கூலிகளாக இருப்பது யார் கண்ணுக்கும் உறுத்தவில்லையே…. சொரணையற்றவர்களாகிக் கொண்டிருக்கிருக்கிறோமா நாம்? நமக்கு சொரணை இருந்தால்.. ” உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக உழவர் திருநாளை முன்னிட்டு………… நடிகை பங்கு கொள்ளும் முற்றிலும் வித்தியாசமான நடன நிகழ்ச்சி..” என்ற விளம்பரங்களைக் கண்டு குறைந்தபட்ச கோபப்பட்டாவது இருப்போமே…..
குதிரைவாலி, சாமை, வரகு, கேழ்வரகு, இணுங்குசோளம், வெள்ளைச்சோளம் தட்டாம்பயிறு, குரங்குத்தட்டான், காராமணி, எள், கொள்ளு, முத்தாமணக்கு, மல்லாட்டை, சனம்பு, போன்ற பெயர்களுக்கெல்லாம் இனி அகராதியில் அர்த்தம் தேட வேண்டிய சூழல் வந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய மக்கள் தொகையில் எழுபது விழுக்காடு மக்களை வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த உற்பத்தியாளர்களாகக் கொண்டே சுதந்திரம் அடைந்த ஒரு தேசம், தான் விடுதலை பெற்ற அறுபதாவது ஆண்டிலேயே வேளாண் பெருமக்களின் எண்ணிக்கையை கணிசமாக இழந்திருப்பது வேதனையான செய்திதான். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் அதிகமாக மக்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கு முன்னுரிமை தருவதற்குப் பதிலாக தற்போது உள்நாட்டு நிலங்களையெல்லாம் வெளிநாட்டுக்காரனுக்கு கிரையம் முடித்துத் தரும் தரகு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் அமெரிக்காகாரனைப் பார்த்தே சூடு போட்டுப் பழகி விட்ட நமது ஆட்சியாளர்கள் தற்போது விவசாயத்துறையிலும் அமெரிக்காவைப் போன்றே கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்துள்ளார்கள்.
கொய்மலர் விஷவெள்ளரி, கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என ஏற்றுமதிக்கான பணப்பயிரை விளைவிப்பதில் முன் முனைப்போடு அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இதில் ஏமாற்து போன கதைகள் திண்டுக்கல், ஆத்தூர்,  வேடசந்தூர், ஒட்டன் சத்திரம் பகுதிகளில் ஆயிரம் உண்டு.
சுதந்திர இந்தியாவில் யாராலும் காப்பாற்ற முடியாத அபாயமான கட்டத்திற்கு உழும் குலத்தில் பிற்ந்தோர்களின் பரம்பரைகள் தள்ளப்பட்டு விட்டார்கள். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என ஓடிய நதிகளையெல்லாம் நாற்றமடிக்கும் கூவங்களாய் மாற்றிய காரணத்தாலே ஆண்டு தோறும் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு பெரு நகரங்களின் சேரிகளில் தினக்கூலிகளாய் குவிந்து கொண்டிருக்கும் உழவர்களின் எண்ணிகை உயர்ந்து கொண்டே போகிறது. இன்று நகரங்களில் குடிபெயரும் பலரில் உழவியல் நுட்பம் தெரிந்த சிறு குறு விவசாயிகளும் அடக்கம்.
இது உண்மை. வேண்டுமானால் ஓர் ஆய்வை அரசாங்கமே நடத்தட்டும். இந்த ஆய்வுக்கு தலைப்பாக ”கடந்த இருபதாண்டுகளில் விவசாயிகளின் நிலை” என்று வைத்துக் கொள்ளலாம். 1980-2009 வரையில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரை வைத்திருந்தவர்களில்  2009 ஆம் ஆண்டில் எத்தனை பேர் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கை ஒளிவு மறைவின்றி வெளியிடட்டும்.
ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னும் மோசம். தான் பட்ட கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை மட்டும் கடந்த பதினைந்தாண்டுகளில் சுமார் மூன்று லட்சத்தை எட்டுகிறது என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. விவசாயம் பொய்த்துப் போவதற்கும் விவசாயிகள் வேறு பணிகளைத் தேடுவதற்கும்  விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்தை நிரந்தரப்படுத்தாததுதான் காரணம்.
விவசாயம் செய்யும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டிருக்கிறது. சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் புறநகர் வளர்ச்சிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலங்களெல்லாம் வீடுகளாகி விட்டன. இன்றைய வியாபார கலாச்சாரத்தில் குறுக்கு வழியில் சம்பாதித்த கருப்பு பணத்தை நிலங்கள் மீது முதலீடு செய்து, அந்த நிலங்களை தங்களின் உல்லாச விடுதிகளாய் மாற்றிக் கொண்டிருக்கிற சூழலில் விவசாய உற்பத்தி பற்றியும், வேளாண்மை வளர்ச்சி பற்றியும் பேசுவதற்கு, கவலைப்படுவதற்குக் கூட நேரமில்லாத, ஆளில்லாத  நிலையில்தான் நமது தேசம் உள்ளது.
1970 ல் தொடங்கி கடந்த நாற்பதாண்டுகளில் விவசாய உற்பத்திக்குத் தேவையான கருவிகளின் விலையேற்றத்தைக் கணக்கிட்டாலே தெரியும். 1970களில் 35 குதிரை சக்தி கொண்ட டிராக்டரின் விலை இருபதாயிரம். 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை 45முதல் 50 ரூபாயாக இருந்தது. அப்போது 400 மூடை நெல் விற்றால் ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் இப்போது அதே டிராக்டரின் விலை 5 லட்சம்.  ஏறக்குறைய 1000 மூடை நெல் விற்றால்தான் ஒரு டிராக்டர் வாங்க முடியும். விவசாய உற்பத்திப் பொருளின் பண்டமாற்று சக்தி உயராமல் இருப்பதற்கு இந்த ஒரு சான்றே போதுமானது. நெல்லை மதிப்பாக வைத்தே அக்காலத்தில் பண்டமாற்று நடைபெற்றதான செய்தியை பட்டிணப் பாலையில் பாடல் ” குறும்பலூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லோடு வந்த வல்வாய் பற்றி” என்ற பாடல் உணர்த்துகிறது.
ஒரு மூடை நெல் விற்றும், ஒரு குவிண்டால் பருத்தி விற்றும்  ஒரு சவரன் தங்கம் வாங்கிய காலத்தில்தான் விவசாய வீடுகளில் சம்மந்தம் செய்து கொள்ள படித்த வர்க்கம் போட்டி போட்டது. இன்று விவசாயம் செய்யும் நபர்களுக்கு மட்டுமல்ல; விவசாயக் குடும்பங்களுக்கே பெண் தருவதற்கும் தயங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கடந்த நாற்பதாண்டுகளில் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்களின் விலை 40 மடங்கு அதிகரித்துள்ளது. அரசுப் பணியாளர்களுக்கு 50 மடங்கு ஊதியம் உயர்ந்துள்ளது. ஆனால் நெல் மற்றும் கோதுமையின் விலை மட்டும் பத்து மடங்கைக் கூட எட்டவில்லை. வரத்து குறைவான காலத்தில் உயரும் காய்கறிகளின் விலையுயர்வை பக்கம்பக்கமாய் எழுதும் பத்திரிகைகளால் விவசாயம் பொய்த்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஏன் எழுத முடியவில்லை?. விவசாய இடுபொருட்களின் விலையேற்றமும் இதன் தட்டுப்பாடு பற்றியும் நம்முடைய ஊடகங்கள் அவ்வளவாகக் கவலைப்படாதது ஏன்? அரசியல் விளையாட்டுகளைப் பற்றியும், அதிகார மாற்றங்களைப் பற்றியும், அதிகார மையங்கள் வெளியிடும் தகவல்கள் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதில் கொஞ்சமாது வேளாண் உற்பத்திக்குத் தடையாக உள்ள பிரச்சினைகள் பற்றி எழுதவேண்டும்.
கடந்த 2008-ம் ஆண்டிலும், இந்தாண்டிலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் விலைவாசி குறைவதும் பின்னர் உயருவதுமாக இருந்ததைக் காண முடிந்தது. 2008 ல் அறுவடை காலத்தில் குவிண்டால்  இரண்டாயிரம் ரூபாய்க்கு  விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட உளுந்து அதற்கடுத்த  மூன்று மாதங்களில் மூன்று மடங்கு விலைக்கு விற்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மழை வருவதை பருவகாலங்களை விடவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களே தீர்மானிப்பதால் மானாவாரி விவசாயம் ஏறக்குறைய முடிவுக்கு வரும் சூழல் உருவாகிவிட்டது. இந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் பெய்த மழையை நம்பி கடன்வாங்கி விதைவிதைத்த மானாவாரி விவசாயிகளின் வயிற்றில் மண்ணைப் போட்டது மழை. ஏறக்குறைய ஒரு மாதகால இடைவெளி விட்டு நவம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையால் ஒரு மண்ணும் விளையவில்லை. மேற்குத் தொடர்ச்சி மழைகளிலும் கடலோர மாவட்டகளில் கொட்டித்தீர்த்த மழை, மேட்டுப்பகுதியின் மானாவாரி நிலங்களைக் கண்டு கொள்ளவேயில்லை.
தமிழகத்தின் பருப்புத் தேவையில் 50 விழுக்காட்டைப் பூர்த்தி செய்யும் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களின் மானாவாரி பயறு வகைகள் விவசாயிகளின் வீட்டுப்பாட்டுக்கே பற்றாக்குறையாக உள்ளது. மலைக்காய்கறிகளின் வரத்தும் நீலகிரி மலையில் ஏற்பட்ட  நிலச்சரிவுக்குப் பிறகு தட்டுப்பாடாக மாறியுள்ளது.
இந்த நிலையைச் சமாளிக்க அரசாங்கம் உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதென அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளது. இது நீண்ட காலத்திற்கான தீர்வாகாது. விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான பணிகளைத் துரிதமாகத் தொடங்க வேண்டும். விவசாயம் பயின்றவர்களில் பலர் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது குறைந்து கொண்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும். விவசாயம் படிக்கும் பட்டதாரிகள் தங்களது கல்வி காலத்திலோ… அதன் பின்னோ கிராமங்களில் குறைந்தது ஓராண்டாவது தங்கியிருந்து பணி செய்ய வேண்டும். விவசாய உற்பத்தியில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
”விவசாயிகளே… நீங்கள் சேற்றிலே கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றிலே கை வைக்க முடியும்” என்ற வாய் வார்த்தைகளால் மட்டுமே விவசாயிகளைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு அவர்களை உள்ளார்த்தமாகக் கொண்டாடவேண்டும். ஏனெனில் ஒரு  தேசம் தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பெருமளவு வேளாண் உற்ப்த்தியாளர்களையே நம்பி உள்ளது. ”எங்களோடு வயலுக்கு வந்தாயா…. நாற்று நட்டாயா….. களை பறித்தாயா… நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா….” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பேசப்படும் வசனம் வெறும் அலங்கார வார்த்தைகளல்ல; உண்மையானவை.
ஒவ்வொரு கிராமமும் தனக்கான தேவையில் குறைந்தது எழுபது விழுக்காடாவது தானே உற்பத்தி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். 1990 களில் கியூபாவின் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையை அந்த நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் கூட்டு உழைப்பால் முறியடித்து முன்னேறியதை நாமறிவோம். நமக்கான உடனடித் தேவை நிலங்களை விற்பதற்கான சந்தைகளல்ல; நிலங்களை வளப்படுத்தி உற்பத்தி பெருக்கத்திற்கான வழி முறைகளே… இதனை உருவாக்காமல் வெறுமனே உழவர் தினங்களையும், பொங்கல் நாட்களையும் கொண்டாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு உழவர்களைக் கொண்டாடுவது எப்போது?
(மார்ச் 2010 பசுமைத்தாயகம் இதழில் வெளியான கட்டுரை)