மாரி மும்மாரி பொழிய…. மதகணை பெருக்கெடுக்க…
மண்ணிடை மரம் செடி கொடியெல்லாம் தழைக்க….
பாரிடை உயிரெல்லாம் பல்வளம் பெற்றிடுக….
பாங்குடன் மானிடம் ஓங்கியே வளர்க……..
– பாவலர் வேங்கையன்

சென்ற மாதம் இறுதி வாரத்தில் மதுரையை ஒட்டியுள்ள நாகமலை அடிவாரத்தில் இருந்தேன். அந்த வாரம் முழுதும் வலுத்த மழை. காற்றில்லாமல்… இடியிடிக்காமல் வானம் கிழிந்து நீரூற்றியது போல இரவெல்லாம் மழை பொழிந்து கொண்டே இருந்தது. “பத்து வருசத்துக் முந்தி இப்பிடி பேஞ்சது… அதுக்கப்புறம் இன்னிக்கித்தான் பேயுது“ என் ஒரு பெரியவர் சொன்னார்.
மறுநாள் காலையில் நான்கு வழிச் சாலைக்காக கட்டப்பட்ட வைகையாற்றின் கரையில் நின்று வெள்ளம் பார்த்தேன். நீரோடிய தடமழிந்து கிடந்த ஆற்றில் திபுதிபுவென செந்தண்ணீர் வந்தது. நேரம் அதிகரிக்க…. அதிகரிக்க…. வெள்ளத்தின் வேகம் கூடிக்  கொண்டேயிருந்தது.  தண்ணீர் வராது என்ற தைரியத்தில்  கரைகளைச் சுருக்கி நிலமாக்கிக் கொண்டவர்களின் எண்ணத்தையெல்லாம் சில நொடிகளில் பொசுக்கிப் போட்டுவிட்டு, ஆனந்தத் தாண்டவத்தோடும், தனக்கான தடத்தை  தானே மீண்டும் உருவாக்கிக்கொண்டு எக்காளத்தோடும், எகத்தாளத்தோடும் வைகை ஓடியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிறைந்திருக்கிறது.  எப்போதாவது கடலில் கலக்கும் தேனி மாவட்டத்து மழை நீர் இந்தாண்டு  கடலில் கலந்தது.
மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆம்பூரில் தொடங்கி செங்கல்பட்டுவரையிலான பயணத்தில் எப்போதும் மணலாறாய் காட்சியளித்த பாலாற்றில் இருகரையடைத்துத் தண்ணீர் சென்றது.  நீர் நிலைகள் எல்லாமே நிரம்பிக் கொண்டிருக்கிற இந்த மாதம்தான் இயற்கையின் எழிலான மாதமாய் இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பட்டாய் பூமி பூரித்துப் போய் இருக்கிறது.  ஏறக்குறைய தமிழகத்தின் எல்லா அணைகளும் நிரம்பிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் கடலில் கலக்கும் நீரின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே  செல்கிறது.  கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆறு, திருச்சி மாவட்டம் கொள்ளிடம்….. நெல்லையில் தாமிரபரணி ஆகியவற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி ஓடிக் கொண்டிருக்கிறது.  தஞ்சை நாகை மாவட்டங்களை வழக்கம் போலவே வெள்ளம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்தின் அணைகளெல்லாம் நிரம்பியதால் இந்துமகா சமுத்திரத்தில் தண்ணீர் கலந்து கொண்டிருக்கிறது.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்து கிடக்கின்றன இதனால் பெரியகுளம்-கொடைக்கானல், வத்தலகுண்டு-கொடைக்கானல், பழனி-கொடைக்கானல் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. சிறுமலையில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. உதகையில் வழக்கம் போலவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏரிகளும் குளங்களும் நிறைந்து எங்கெங்கு காணினும் தண்ணீராய்த் தெரிகிறது.
இப்படி மழைக்காலச் செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். நதிகள் கடலைத்தொடும் போதும், கழிமுகங்களில் செந்நீரும், மழைநீரும் உப்பு நீராய் மாறும் மாற்றத்தைக் காணும் போதும் ஏற்படும் ஆனந்தம் தண்ணீர் வீணாகிறதே என்ற எண்ணம் தோன்றும் போது மறைந்து விடுகிறது.
மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் அணைகளும், ஏரிகளும், குளங்களும் நமது ஆட்சியாளர்கள் கடைபிடித்த  நீர்நிலை கட்டமைப்பிற்கான மெத்தனத்தாலும்,, ரியல் எஸ்டேட் புரோக்கர்களாலும், ஆதிக்கவாதிகளின் ஆக்கிரமிப்பாலும்  ஏறக்குறைய நாற்பத்தி ஐந்து விழுக்காடு ஏரி,  குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.  அவைகள் வீட்டுமனைகளாக…. போக்குவரத்துப் பணிமனைகளாக….. புதிய பேருந்து நிலையங்களாக…… நீதி மன்றவளாகங்களாக ‘ஞானஸ்தானம்‘ பெற்று விட்டன.
தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டகாலம் இருந்தது. காலகாலமாய் நமது பண்போடு கலந்திருக்கிற உயிர் நிலைகள்… நம் கண்மாய் ஏரி நீர்நிலைகள். என்று எங்கள் பாவலர் வேங்கையன் பாடியது மிகையல்ல… வரலாற்று ஆவணம்.  இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புகள்.
புவியியல் அமைப்பின்படி  தமிழகம் மலை மறைவு பிரதேசம். தமிழகத்தின் புவிமேற் பரப்பு 73 விழுக்காட்டிற்கும் அதிகமான பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்க குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்பின் கீழ் 16 ஆயிரத்து 477 சிறு குளங்களும், 3,936 நடுத்தர குளங்களும் மழையை நம்பியுள்ளது.
மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் ஐந்தாயிரத்து 276 குளங்கள் மழையை நம்பியும், மூன்றாயிரத்து 627, குளங்கள் நதி நீர் பெறும் குளங்களாகவும் உள்ளன. இது தவிர  தனியார் குளங்கள் ஒன்பதாயிரத்து 886 உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஆக்ரமிப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும், நீர் பிடிப்பு பகுதியின் வனப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் குளங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 32 ஆயிரத்து 202 குளங்கள் இருந்தன. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 விழுக்காடு குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது தெரிய வந்தள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 15 விழுக்காடு குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்ததோடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. மீதமிருக்கும் குளங்களும் தூர்வாராத காரணத்தால் மழை நீரைச் சேமிக்கும் சக்தியைக் கொஞ்சங்கொஞ்மாக இழந்து கொண்டிருக்கிறது
இந்நிலையில் கடந்த 2007-08 ம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், 2009 ம் ஆக்கிரமிப்பு பகுதியில் பத்தாண்டுகளுக்கும் மேல் ஆண்டாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. (“ஆறு கண்டார் அதனாலே சோறு கண்டார் என்று கவிதை எழுதிய நம் முதல்வரின் ஆட்சியில்தான் இந்த முரண்பாடு)
பிட்டுக்கு மண்சுமந்து கடவுளே குடி மராமத்து செய்த வரலாற்றுப் பெருமை படைத்த மதுரையில் 39 விழுக்காடும், சென்னையில் 60 விழுக்காடு குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகிறது.
தமிழகத்தில் 1950களில் ஏரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவது 17.3 விழுக்காடு என்று இருந்தது. இப்போது 2010ல் 6.1விழுக்காடாகக்  குறைந்துள்ளது. இந்த 60 ஆண்டுகளில் 29விழுக்காடாக இருந்த கிணற்று நீர் பாசனமும் இப்போது 22 விழுக்காடாகக் குறைந்து விட்டது.  மேடுதட்டிப் போன அல்லது இருந்த தடமழிந்த நீர் நிலைகளில் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும்?
சென்னை போன்ற பெரு நகரங்களின் தண்ணீர்  தேவைக்கு  80 விழுக்காடு தண்ணீர் மாநகருக்கு வெளியிலிருந்துதான் கொண்டுவரப்படுகிறது. அப்படிக் கொண்டு வந்து கொடுத்தும்கூட பற்றாக்குறை உள்ளது. 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில் பெய்யும் மழையை ஆண்டுக்கு  60 நாள்களுக்கு மட்டும் சேமித்தாலே இந்த மழையின் அளவு 1,200 மில்லி மீட்டராகும்.  இந்த மழை நீர் மூலம், நாள் தோறும் 5 பேர் உள்ள குடும்பத்துக்கு 125 லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
சிங்கப்பூர், டோக்கியோ நகரங்களிலும் ஜெர்மனியிலும் புத்திசாலித்தனமான மழைநீர் சேமிப்பு முறைகளைக் கையாள்கிறார்கள். கடந்த தலைமுறையில் நமது பாட்டிமார்கள் நம் வீட்டு முற்றத்தில் அண்டா உள்ளிட்ட பாத்திரங்களில் மழைநீரைச் சேமித்து வைத்து, அந்தத் தூய்மையான நீரை ஒரு வாரம் சமையலுக்குப் பயன்படுத்திய அதே பாணிதான். ஆனால் இவர்கள் கட்டடங்களில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மழைநீரைச் சேமித்து வைக்கிறார்கள்.
சிங்கப்பூர் விமான நிலைய கட்டடத்தின் மேற்பரப்பிலும், சுற்றுப் பகுதியிலும் பெய்யும் மழையைத் தரைதளத் தொட்டிகளில் சேமித்து வைக்கிறார்கள். இதன் பெரும் பகுதி கட்டடத்தைப் பராமரிப்பதிலும், கழிவறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மழை நீர் விமான நிலையத்துக்கு ஒர் ஆண்டுக்குத் தேவைப்படும் தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதியைச் சமாளிக்க உதவுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் சேமிப்பு.
இதே முறை வானுயர் கட்டடங்களிலும் பயன்படுகிறது. சிங்கப்பூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்திலும் மழைநீர்த் தொட்டி உள்ளன. அவர்கள் இந்த நீரைக் குடிநீருக்காக ஒரு பகுதியையும், மீதியை பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
ஜெர்மனியில் உள்ள வீடுகள் மழைநீர்த் தொட்டியை கருவூலம் போலக் காக்கின்றனர். ஏனென்றால், அங்கே தொழில்துறை மாசு அதிகம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்குக் கட்டணம் அதிகம். ஆகவே அவர்கள் மழை நீரை வீட்டின் அடியில் பெரிய தொட்டிகளில் சேமித்து வைத்து, அதைக் குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்துகிறார்கள்.  ( நன்றி. தினமணி தலையங்கம் 18-11-2010)
இயற்கை தரும் மழையை நாம் எந்த அளவிற்கு சேமிக்கிறோம். ஒரு கணக்கீட்டைப் பார்ப்போம் 2400 சதுர அடி கொண்ட இடத்தில் (1கிரவுண்டு) பத்து  மில்லி மீட்டர் மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 2,230 லிட்டர். ஒரு  ஏக்கரில் பத்து  மில்லி மீட்டர் மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 40,460 லிட்டர். 1 சதுர  கிலோ.மீட்டர் நிலத்தில் பத்து  மில்லி மீட்டர் மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 10,000,000 லிட்டர் இதில் நாம் எவ்வளவு நீரை சேமிக்கிறோம்….? எவ்வளவு பேர் உண்மையில் வீட்டில் மழை நீர் சேமிப்பு செய்கிறோம…..? எவ்வளவு விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் உள்ளன…? எவ்வளவு ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டது….? இயற்கை நம் நாட்டிற்கு இரண்டு பருவ மழைப் பொழிவை தருகிறது, திட்டமிடாமை காரணமாக சேமிக்காமல் வெள்ளம் ஏற்பட்டு உயிர் இழப்புக்களையும் நஷ்டங்களையும் சந்திக்கிறோம்.
ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கழிவு நீரை சுத்தம் செய்து குடி நீராக அடுத்த வருடமே வினியோகம் செய்யப்போகிறார்கள் என்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
நம் நாட்டின் சராசரி மழை பொழிவு 12.50   மில்லி மீட்டர். சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் மக்கள் தொகை உள்ள , உலகில் அதிக கால்நடை உள்ள, சுமார் 70விழுக்காடு மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ள நாம் நமக்கான நீராதாரங்களைக் காக்கும் திட்டங்களை முழு வீச்சில் நடைமுறைப்படுத்தியதில்லை.
மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைக்காக நமது பழம்பெரும் பாரம்பரியங்களையெல்லாம் தாரை வார்த்துக் கொண்டதைத் தவிர வேறெந்த ஆணியையும் நம்மால் புடுங்க முடியவில்லை.
”ஆற்று நீர் என்பது மாதச் சம்பளம் மாதிரி. அந்தந்த மாசம் எடுத்துச் செலவு செய்து கொள்ளலாம். நிலத்தடி நீர் அப்படியில்லை. அது காலம் காலமாய் பூமித்தாய் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பூர்வீகச் சொத்து. ஒரு மாதம் மளிகைச் சாமான் வாங்குவதற்காக யாராவது பூர்வீகச் சொத்தை விற்பார்களா?” என்று எப்போதோ ஒரு திரைப்படத்தில் கேட்ட வாசகம் இன்னும் மனதில்    இருந்து கொண்டுதானிருக்கிறது.
கனமழையல்ல… மாமழை பெய்துகொண்டே இருக்கிறது மலையில் விழுந்து தரையில் விழுந்து  வீதிகளிலும்,  மொட்டை மாடிகளிலும்… நடந்து கடைசியில் வீணாகக் கடலில் கலக்கிறது.  இருக்கிற நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தெரியாமல் வாழ்ந்த   பரம்பரை இந்தப் பரம்பரை என பிற்காலத்தில் வரலாறு நம்மைப் பழிக்குமே என்ற வெட்க உணர்வு  தூய மழைத்துளிகள் முகத்தில் விழும்போதெல்லாம் எழுகிறது.