நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, February 26, 2012

மே 5-வன்னியர் திருவிழா அனைவரும் வாரீர்....



காற்றின் மொழியானக் கவிதையின் குரல்

            காதலியின் முத்தம், தாயின் மடி, மனைவியின் அக்கறை, குழந்தையின் புன்னகை இவை போன்றதுதான் கவிதை. மொழியின் அழகை மிகச் சிறப்பாக வெளிப்படச்செய்யும் ஒப்பனைக்கலை எனலாம் கவிதையை. அந்த அழகில் மயங்கியோர் ஒருவித அடிமைகளாகிவிடுகிறார்கள். நடிகையைத் திரையில் பார்த்து ரசிகனாகி, பிறகு மனதுக்குள் அவளையே காதலிக்கும் சிலரைப்போல, கவிதையைப் படிக்கத் தொடங்கி வாசகனாகி, பின்னர் அதையே சுவாசமாக்கி கவிஞரானோர் பலராவர். 

தமிழ்க் கவிதைச் சூழலில் கவிதைக்கும் கவிஞர்களுக்கும் எல்லைக்கோடுகள் இல்லை. தமிழகத்தில் மக்கள்தொகையைவிட கவிஞர்களின் தொகை கூடுதலாக இருக்குமோ என்கிற அளவுக்கு கவிதைகளின் நெரிசலைக் காணமுடிகிறது. எல்லாக் கவிதைகளுக்கும் நிச்சயமாக ஒரு ரசிகன் உத்தரவாதம் உண்டு. அவன், அதன் படைப்பாளி. அதனைத் தாண்டி அந்தக் கவிதை எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறது, ரசிக்கப்படுகிறது, சிலாகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து கவிதையின் வீச்சும் கவிஞனின் ஆற்றலும் கணக்கிடப்படும். எனினும், இவைதான் கவிதை. இவை மட்டும்தான் கவிதை  என்கிற இலக்கிய சர்வாதிகாரிகளை மீறி பூத்துக் கொண்டே இருக்கிறது கவிதை ஜனநாயகம்.


உள்ளீடற்ற வார்த்தை அலங்காரங்களைக் கவிதைகள் என்று உலகப் புத்தகத்தின் பக்கங்கள் பதிவு செய்வதில்லை. சமூகக்கோபம், அரசியல் அனல், தனிமைத் துயர், கையறுநிலை, கழிவிரக்கம், காதலின் மேன்மை எனக் கவிதையின் பாடுபொருளாக எவை இருப்பினும் அதில் உண்மையும் உணர்வும் வார்த்தைகளாகியிருத்தலே கவிதையை நிலைத்திருக்கச் செய்கிறது. சொற்களின் நேர்த்தியும் அடர்த்தியுமே நல்ல கவிதைக்கான எளிய இலக்கணம். மீந்துகிடக்கும் சொற்களின் சேமிப்புக் கிடங்காகவோ, தேவையற்ற சொற்களின் குப்பைத் தொட்டியாகவோ ஒரு நல்ல கவிதை எப்போதும் இருப்பதில்லை. 

கவிதையைப் படிப்பதற்கும் ரசிப்பதற்கும் கூட ‘அளவி’களை உருவாக்கிப் பார்க்கிறார்கள் இலக்கிய நாட்டாண்மைகள். எழுதியவரே அதைப் படித்துக்காட்டுவதைவிட, வாசகனின் மனது படித்துணர்வதே கவிதை வாசிப்பின் தன்மை என்கின்றனர் சிலர். படைத்தவனே அந்தக் கவிதையை வாசிக்கும்போதுதான் அதன் உண்மை நோக்கம் வெளிப்படும் என்றும் வாசக மனப்பரப்போ படைப்பாளி சிந்திக்காத கருத்துகளையெல்லாம் மேலேற்றிச் சொல்லும் என்றும் மற்றும் சிலர் கூறுகின்றனர். கவிதையைப் படைத்து முடிக்கும்வரைதான் அது படைப்பாளியின் சொந்தம். படைக்கப்பட்டபின்பு அதன் மீது பொதுத்தளத்திலிருந்து வெளிப்படும் பார்வையும் விமர்சனமும் கட்டுப்பாடற்றது என்கிறார்கள் வேறு சிலர். கவிதைகள் பல வடிவங்களில் இருப்பதுபோலவே, அதனை ரசிப்பதற்கும் பல வடிவங்கள் இருக்கின்றன. ஒற்றைத் தளத்தில் கவிதை வாசிப்பைக் குறுக்கிவைத்திட யாருக்கும் ஏகபோக அனுமதியில்லை.

கவிதைப் படித்தல் என்பது போல கவிதைக் கேட்டலும் இனிமையானது. நல்ல கவிதைகள் சில செவிக்கு உணவாகும்போது கற்றலிற் கேட்டலே நன்று என்கிற மூதுரை, அந்தக் கவிதைக்கு முன்பாக நினைவில் தேங்குகிறது. ஆயத்த ஆடைபோல மேடைக்கேற்றவாறு நெய்யப்படும் பெரும்பாலானக் கவிதைத் துணிகள் அந்தத் தருணத்தில் பளபளப்பாகக் கவர்ந்தாலும், வெகு சீக்கிரத்தில் சாயம் வெளுத்துவிடுகின்றன. பல நேரங்களில் கவிஞர்களின் சாயமும்தான். சுயதேவைக்காக அவசரமாக நெய்கின்ற கவிதைகள் மீது ஏற்படுகின்ற கோபம் ஒருபோதும் நல்ல கவிதைக் கேட்டல் மீதான ரசனையை நமக்குள் குறைத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்.

வள்ளுவம் தொடங்கி கம்பனின் விருத்தங்கள், ஆழ்வார்கள்லிநாயன்மார்களின் பக்தி இலக்கியங்கள், பாரதியின் குயில்பாட்டுலிபாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் இடிமுழக்கங்கள் எனப் பலவற்றையும் நாமே படிப்பதைவிடவும் பிறர் சொல்லக் கேட்கும்போது கிடைக்கின்ற சுகமே தனி. 

படைத்தவனின் மொழியை அவன் குரலிலேயே கேட்கும் வாய்ப்பு கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெரும்பாலோருக்குக் கிடைத்தது. அறிஞர் அண்ணாவின் நினைவேந்தலில் அவரது இதயத்தை இரவல் கேட்ட கலைஞர் கருணாநிதியின் கவிதாஞ்சலி இந்த வகையில் முதல் படையல் எனலாம். உரைநடையையும்கூட தன் குரல்வளத்தால் கவிதைபோல பிறரின் காதுக்குள் இறக்கிய கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஒலிநாடாக்கள் இன்னொரு வகை விருந்து. அதன் பின், கவிதை கேளுங்கள் என கவிஞர் வைரமுத்து தன் குரல் பதிவான ஒலிநாடாக்களாக இலக்கியப் பந்தி வைத்தார்.


இவையெல்லாம் வழக்கமான கவிதை வாசகர் பரப்பைத் தாண்டி பலரின் செவிக்குள் புகுந்து இதயத்தில் இருப்பு வைக்கப்பட்டன. மேற்சொன்னவர்கள் பெற்றிருந்த பெயரும் புகழும் இந்த செவிவிருந்துக்குச் சிறப்பு சேர்த்தன எனலாம். கவிதைகளை ஒலியாக்கம் செய்யும் முயற்சிகள் கவிதைப் புத்தகங்கள் அளவிற்குப் பெருகவில்லை என்றாலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கவிதைக்கேற்ற மொழியைப் போல கவிதைக்கேற்ற ஒலியும் அவசியமாகிறது. கேட்போரை ஈர்க்கவும் அவர்களின் மனதிற்குள் இறங்கவும் கவிதைகள் புதிய தொழில்நுட்பங்களுடன் கை கோர்த்துக் கொள்கின்றன. குரலைப் பின்தொடர்ந்து வரும் இசை என்பது இன்றைய தொழில்நுட்பம். தெளிவான குரலுடன் சேர்கின்ற இனிமையான இசை, கவிதையைக் கேட்கத் தூண்டும் ஆர்வத்தைப் பெருகச் செய்கிறது. காற்றின் அலைவரிசையில் பயணிக்கும் கவிதைகளை நம் காதுகள் தேடிச் செல்கின்றன. கவிஞர் ஜெயபாஸ்கரனின் ‘காற்றின் குரல்’ ஒலித்தகடு அத்தகையது.

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் 18-2-2012 நடைபெற்ற விழாவில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசு இதனை வெளியிட்டார். எழுத்தாளர் பிரபஞ்சன், இயக்குநர்  பாரதிகிருஷ்ணகுமார், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் ஆரூர் புதியவன் உள்ளிட்ட பலர் ஒலித்தகடின் சிறப்பினைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். 

இந்த ஒலித்தகடு, கவிதை இன்பத்தை நம்மை நோக்கிக் கொண்டு வரும் அதேவேளையில், கவிதை இன்பத்தை நோக்கி நாம் நகரும்படியும் செய்கிறது அந்தக் ‘காற்றின் குரல்’. இரு திசைகளிலிருந்து ஒரு மையப்புள்ளியை நோக்கி நகரும்போது கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு நெருக்கமாகிறது. இயற்கையையும் சமுதாயத்தையும் நேசிக்கின்ற படைப்பாளியின் கவிதைகளைக் கேட்குந்தோறும் இன்பக்கேணியில் அமுதம் ஊற்றெடுப்பதென்பது போன்ற எண்ணம் பீறிடுகிறது. படைப்பாளி தன் குரலை முன்னிலைப்படுத்தாமல் கவிதைத் தோழமைகளின் குரலோடு சேர்ந்து பயணிப்பதும் அந்தப் பயணத்தின் இறுதிவரை நிழல்போல் தொடரும் அ.தட்சிணாமூர்த்தியின் இசையும் நல்லதோர் வீணையின் நாதமாய் அமைந்திருக்கிறது.

அலைகளின் ஓசையைக் கேட்டபடி, கரையில் நின்று கால் நனைக்கும் அனுபவத்தை வழங்குகிறது இளம்பிறையின் குரலில் ஒலிக்கும் கடல் கவிதை. செங்கல்சூளைக்கு விறகாகும் ஆலமரத்தின் அவலத்தை படைப்பாளியின் வேதனையோடு வெளிப்படுத்துகிறது ஜெயபாஸ்கரனின் குரல். குழந்தைகள் உலகத்திற்கு நம்மை விரல்பிடித்து அழைத்துச் செல்கிறது தென்காசி மீனாவின் குரலில் இழையும் கவிதை. வயலும் வயல் சார்ந்ததுமான மருதநிலம் இன்று விலையும் விலை சார்ந்ததுமான வியாபாரப் பொருளாகி பாலையாய் திரிந்த அவலத்தைச் சொல்கிறது பர்வீன் சுல்தானாவின் குரல்.. மனைவியைத் தாயின் இடத்தில் உட்கார வைக்கும் பேராண்மையைக் காண முடிகிறது வீ.கே.டி.பாலனின் குரலில். குறுங்கவிதை போன்று வெளிப்படுகிறது ஏகா.ராஜசேகரின் தொகுப்பரைக் குரல். ஒவ்வொரு கவிதையும் அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு குரலுடனும் சிறப்பு நுட்பங்களுடன் கூடிய இசையுடனும் அமைந்திருக்கின்ற அதே வேளையில், எல்லாவற்றிலும் உணரமுடிகிறது கவிஞர் ஜெயபாஸ்கரனின் கவிதை ஆளுமையை..

விரைந்து கொண்டிருக்கிறது உலகம். கால்களே இறக்கைகளாகிவிட்டன மனிதர்களுக்கு. விருந்துக் கூடங்களில்கூட நின்றபடியே சாப்பிடும் அவசர யுகத்திற்குள் ஆட்பட்டடிருப்போரை சாவகாசமாக உட்கார்ந்து கவிதையைப் படி என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. கவிதையின் சுவை உணராச் சமுதாயமாகவும் இதை விட்டுவிடமுடியாது. இத்தகைய சூழலில், காற்றின் திசைகளில் கவிதை ஒலிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். தேவையுள்ளோர் தேடிக் கேட்பர். பேச்சு சந்தையாய் அலறும் பண்பலைகளில், எதிர்காலத்தில்  ஏதேனும் சில பொழுதுகளில் இத்தகை கவிதைக் குரல்கள் ஒலிக்கக்கூடும். தமிழுக்கும் கவிதைக்குமான உறவு தொப்புள்கொடி போன்றது. அந்த ஆதி உறவு, அறுபட்டபிறகும் தொடரவே செய்யும். காலத்திற்கேற்றபடி கவிதை வாசிப்பும் ரசிப்பும் மாறிக்கொண்டே இருக்கும் உலகில் காலமறிந்து ஒலித்திருக்கிறது கவிஞர் ஜெயபாஸ்கரனின் ‘காற்றின் குரல்’.



நன்றி-நந்தவனம்
ஒலிக் குறுந்தகடு விலை ரூ.100/-    

தொடர்புக்கு: கவிஞர் ஜெயபாஸ்கரன் 94449 56924
                        ஜெகமதி கலைக்கூடம் 99943 66153